கன்னியாகுமரியில் கடல் சீற்றம்.. ஊருக்குள் புகுந்த கடல்நீர்.. மீனவ கிராம மக்கள் அச்சம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 25, 2019 01:13 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாக, மீனவ கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

sea outrage and sea water enters into many houses in kanyakumari

தெற்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. அடுத்த 38 மணி நேரத்தில் அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலில் மணிக்கு 50 கிமீ முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், சில இடங்களில் கடல் சீற்றம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, சென்னை முதல் நாகப்பட்டினம் வரை உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவானப் பிறகு வட மேற்கு திசையில் நகரக்கூடும் என்பதால், நாகப்பட்டினம் - சென்னை இடையே அந்த புயல் கரை கடக்கவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

நீரோடி, சின்னதுறை, வள்ளவிளை அழிக்கால், மண்டைக்காடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. அழிக்கால் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் கடலரிப்புத் தடுப்புச் சுவர் சேதமடைந்ததால் கடல் நீர் தென்னந்தோப்புகளில் சூழ்ந்தது. இதனால் அச்சமடைந்த அழிக்கால் மீனவ கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கடல் நீர் புகாமலிருக்க வீடுகளை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.

குளச்சல் சுற்றுவட்டார கடற்பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், 500க்கும் மேற்பட்ட கட்டுமர நாட்டு படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம், கடியபட்டினம்  ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்துள்ளது. இதனையடுத்து, நாகை, புதுச்சேரி உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும் மீனவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #WEATHER #OUTRAGE #FISHERMAN #KANYAKUMARI