COVAXIN தடுப்பூசி போட்டவர்களுக்கு பாராசிட்டமால் தேவையா? பாரத் பயோடெக் விளக்கம்
முகப்பு > செய்திகள் > இந்தியாCOVAXIN தடுப்பூசி போட்டவர்களுக்கு பாராசிட்டாமால் தேவைதானா என்பது குறித்து பாரத் பயோடெக் விளக்கம் அளித்துள்ளது.
COVAXIN தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் பாராசிட்டமால் அல்லது வேறு ஏதேணும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என இன்று பாரத் பயோடெக் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பாரத் பயோடெக் கூறுகையில், “சில தடுப்பூசி மையங்களில் குழந்தைகளுக்கு COVAXIN தடுப்பூசி செலுத்திய பின்னர் 500 மிகி கொண்ட 3 பாராசிட்டமால் மாத்திரைகள் பரிந்துரை செய்யப்பட்டு வருவதாக அறிந்தோம். COVAXIN தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு பாராசிட்டமால் அல்லது வேறு வலி நிவாரண மாத்திரைகள் எதுவும் வேண்டாம்.
30 ஆயிரம் பேருக்கு நாங்கள் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் சுமார் 10-20% பேர்களுக்கு மட்டும் சிறிய பக்க விளைவுகள் இருந்தன. அதுவும் மிதமான காய்ச்சல். அதுவும் 1- 2 நாட்களில் மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லாமல் சரியாகிவிடும். மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே மருந்து மாத்திரைகள் எல்லாம் தேவைப்படும்.
பாராசிட்டமால் மாத்திரை வேறு சில கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால், COVAXIN தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பாராசிட்டமால் தேவையில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது.