‘அரசியலுக்கு ரீ-என்ட்ரி’?.. செய்தியாளர்களிடம் ‘ரஜினிகாந்த்’ சொன்ன பரபரப்பு பதில்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எதிர்காலத்தில் அரசியல் பிரவேசம் செய்வது குறித்து நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். இதனை அடுத்து சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்ட செயலாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் அவர்களுடன் இன்று ரஜினிகாந்த் ஆலோசனை நடத்துகிறார். அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் அவர் முதல்முறையாக சந்திக்க உள்ளார்.
மக்கள் மன்றத்தில் உள்ள நிர்வாகிகள் பலர் அமைப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘எதிர்காலத்தில் மீண்டும் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என்ற கேள்வி உள்ளது. அதை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பேன்’ என அவர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு முன், அரசியலுக்கு வரவில்லை என ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்ட நிலையில், மீண்டும் அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.