“ஷாக் ஆயிட்டேன்!”.. ஷங்கர் வெளியிட்ட அறிக்கை! எழும்பூர் நீதிமன்றத்தின் ‘பரபரப்பு’ விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் பட கதை தொடர்பாக சங்கருக்கு எதிராக ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இதனிடையே இயக்குநர் ஷங்கருக்கு நீதிமன்றத்தின் தரப்பிலிருந்து பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டதாக செய்திகள் தொடர்ந்து வெளிவர தொடங்கின. இது தொடர்பாக தற்போது எழும்பூர் நீதிமன்றம் விளக்கம் அளித்திருக்கிறது. அந்த விளக்கத்தில், “இயக்குநர் ஷங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் எதுவும் பிறப்பிக்கப் படவில்லை. நோட்டீஸ் மட்டுமே பிறப்பிக்கப்பட்டது. அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற இணையதளத்தில் வெளியான தவறான பதிவு நீக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளது.
இதன் பிறகு இயக்குனர் ஷங்கர் தமது தரப்பில் இருந்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், “எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து இருப்பதாக வெளியான ஒரு பொய்யான செய்தியை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். எனது வழக்கறிஞர் சாய் குமரன் நீதிமன்றத்தை அணுகி இந்த செய்தி குறித்து அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். எனக்கு எதிராக அப்படி எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார். இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேடுகளில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்திருக்கிறது.
அது தற்போது சரி செய்யப்பட்டு உள்ளது. சரி பார்க்கப்படாமல் இப்படிப் பொய்யான செய்தி உலவுவதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும் நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலை தந்துள்ளது.
இதுபோன்ற பொய்யான செய்திகள் பரவாது என்பதை உறுதி செய்ய எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பகிர வேண்டும் என்று தயவு கூர்ந்து அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
