‘ரஜினி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார்’!.. அவர் இந்த முடிவு எடுக்க ‘காரணம்’ இதுதான்.. அர்ஜுன மூர்த்தி பேட்டி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என ரஜினிகாந்த் மன உளைச்சலில் உள்ளதாக அர்ஜுன மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தொடங்கப்படுவதாக இருந்த அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினிகாந்தால் நியமிக்கப்பட்ட அர்ஜூன மூர்த்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஓய்வு தேவை. அரசியலில் செயல்படுவது நல்லது இல்லை என மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். நானும் ஒரு மனிதன்தான், அவரின் கஷ்டத்தை நாம் உணர வேண்டும். அவர் உடல்நலம் கருதி எடுக்கப்பட்ட முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என அவர் மன உளைச்சலில் உள்ளார்.
மக்கள் அனைவரும் அவருடன் இணைந்து உதவிகளையும் ஆதரவையும் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய நிலைப்பாடு அவருடன் இருப்பதுதான். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என நாங்கள் செயல்பட்டோம். என்னை பொறுத்தவரை அரசியலில் உழைக்க வந்துள்ளேன், தவிர பிழைக்கவரவில்லை. தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென ரஜினி ஆர்வமாக இருந்தார். அவர் முடிவு உடல்நிலை காரணமாக எடுக்கப்பட்டது. எனவே அவரை யாரும் விமர்சிக்க கூடாது.
எனக்கு ஒரு கண் மோடி என்றால் மற்றொரு கண் ரஜினி. மக்களுக்கு நல்லது செய்வேன் என்று ரஜினி கூறி உள்ளார் எனவே நான் அவருடன் தான் பயணிப்பேன். ஒரு மாற்றம் வரவேண்டும் என்று ரஜினியிடம் சேர்ந்தேன். என்னுடைய நிலைப்பாடு ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று, ஆனால் அதற்கு கடவுள் அருள் வேண்டும். இந்திய அளவில் மோடியையும் தமிழ்நாடு அளவில் மாற்ற வேண்டுமென்று ரஜினியையும் ஆதரிக்கிறேன். தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற நிலைப்பாட்டை ரஜினியே எடுப்பார்’ எனக் கூறினார்