'ஆன்லைன் கிளாசுல வெறும் டவல் கட்டிட்டு பாடம் எடுப்பாருங்க...' சென்னை 'பிரபல' பள்ளி ஆசிரியர் மீதான 'பாலியல்' புகார்...! 'மாணவர்கள் கொடுத்த அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகள்...' - விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கே.கே.நகரில் இயங்கும் பத்மா சேஷாத்ரி பாலபவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் பணிபுரியும் கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் ஆசிரியர் ஒருவர் மீது மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
இவர் பள்ளி மாணவிகளுக்குப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துவந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னாள் மாணவர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட இந்த பிரச்சனை கவனத்துக்கு வந்திருக்கிறது.
கொரோனா காலகட்டத்திற்கு முன்னரே, மாணவர்களுக்கு ஆபாசப் படங்களின் இணையப் பக்கங்களை அனுப்புவது, மாணவிகளின் தோற்றம் குறித்து ஆபாசமாகப் பேசுவது, பாலியல் ஜோக்குகளை மாணவிகளிடம் கூறுவது, நள்ளிரவில் மாணவிகளுக்கு போன் செய்வது, தேவையில்லாமல் மாணவிகளிடம் தொட்டு பேசுவது, அதுமட்டுமல்லாமல், கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்த ஆன்லைன் வகுப்புகளில் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு பாடம் நடத்துவது என பல்வேறு குற்றசாட்டுகளை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி பி.எஸ்.பி.பியின் முன்னாள் மாணவர்கள் பள்ளி டீனுக்கு புகார் கடிதம் எழுதி அனுபியுள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் 'சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் (வணிகவியல்) மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.
மேலும் நாடாளமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், பாடகி சின்மயி உள்ளிட்டோர் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், ஆசிரியர் மேல் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்து அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தற்போது அவர் ஆசிரியர் பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், போலீசார் நங்கநல்லூரில் உள்ள அந்த ஆசிரியரின் வீட்டில் லேப்டாப், செல்பேசி உள்ளிட்ட அவரது பொருட்களை கைப்பற்றி, அவரது அம்மா மற்றும் மனைவிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.