பள்ளி ஆசிரியரை ‘மறுமணம்’ செய்த அமேசான் சிஇஒ-வின் முன்னாள் மனைவி.. இதுக்கு அவரோட ரியாக்ஷன் என்ன தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > உலகம்அமேசான் தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவி மெக்கன்ஸி ஸ்காட், பள்ளி ஆசிரியர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டார்.
கடந்த 1993-ம் ஆண்டு ஜெஃப் பெசோசை, மெக்கன்ஸி ஸ்காட் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு அடுத்த ஆண்டே இருவரும் இணைந்து அமேசான் நிறுவனத்தை தொடங்கினர். அமேசான் நிறுவனத்தின் ஆரம்ப கட்டத்தில் அதன் முதல் ஊழியர் குழுவில் மெக்கன்ஸியும் ஒருவராக இருந்தார். திருமணமாகி 26 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019-ம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துவிட்டனர்.
அப்போது விவாகரத்துக்காக அமேசான் பங்குகளில் 25% அளவை ஜெஃப் பெசோஸ், மெக்கன்ஸிக்கு அளித்தார். இதன் மூலம் ஒரே நாளில் 2019-ல் உலகின் 21-வது பெரும் பணக்காரராகவும், உலகின் பணக்கார பெண்மணிகளில் 3-வதாகவும் மெக்கன்ஸி மாறினார்.
இந்நிலையில் மெக்கன்ஸி, சீயாட்டிலைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரான டான் ஜூவெட் என்பவரை தற்போது மறுமணம் செய்துள்ளார். Giving Pledge என்ற அமைப்புக்கு எழுதிக்கொடுத்த உறுதிப்பத்திரம் வாயிலாக இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த டான் ஜூவெட், ‘மகிழ்ச்சியான தற்செயலான ஒரு நிகழ்வில், எனக்கு மிகவும் தெரிந்த தாராளமான மற்றும் கனிவான ஒருவரை நான் திருமணம் செய்து கொண்டேன். மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக மகத்தான நிதியை அளிக்கும் உறுதிப்பாட்டில் மெக்கன்ஸியுடன் இணைகிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தனது முன்னாள் மனைவியின் மறுமணத்துக்கு அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பெசோஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘டான் ஒரு சிறந்த மனிதர். இருவரும் திருமணம் செய்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது’ என ஜெஃப் பெசோஸ் கூறியதாக அமேசான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.