'18 நாள் முன்னாடி இருந்த 5 மாடி கட்டிடம்...' 'இப்போ வேற இடத்துல இருக்கு...' எப்படி சாத்தியமாச்சு...? - வியக்க வைக்கும் ஆச்சரியம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் ஷாங்காய் மாகாணத்தின் குஅங்பு மாவட்டத்தில் 1935-ம் ஆண்டு ஐந்து மாடிகளை கொண்ட மழலையர் பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பள்ளிக்கூடத்தில் பல ஆண்டுகளாக குழந்தைகள் பாடம் கற்று வருகின்றனர்.
85 ஆண்டு கால மரபை கொண்ட அந்த பள்ளிக்கூட கட்டிடம் அரசால் பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் கலாச்சாரக் கட்டிடமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இந்த 5 மாடி கட்டிடம் சுமார் ஏழாயிரத்து அறுநூறு டன் எடை கொண்ட ’T’ வடிவிலான கட்டிடம் ஆகும்.
இந்த நிலையில், பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியில் புதிதாக வணிகவளாகம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து, பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் நிறைந்த கட்டிடமாக அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கூட கட்டிடத்தை இடித்தாக வேண்டிய நிர்பந்தம் உருவானது.
இதனால், கட்டிடத்தை இடிக்காமல் அதை அப்படியே 21 டிகிரி கோணத்தில் 62 மீட்டர் தூரத்திற்கு நகர்த்தி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.
இதனையடுத்து, கட்டிடத்தை அஸ்திவாரத்தில் இருந்து மொத்தமாக பெயர்த்து எடுக்க அதிகாரிகள் திட்டம் தீட்டினர். இதற்காக கட்டிடத்தை தாங்கி பிடிக்கும் அஸ்திவார தூண்கள் உடைக்கப்பட்டு அந்த தூண்களுக்கு பதிலாக நகரும் வகையிலான இயந்திர கால்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 198 இயந்திர கால்கள் அமைக்கப்பட்டன.
கட்டிடத்தின் அஸ்திவார தூண்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு கட்டிடத்துடன் இயந்திர கால்கள் பொருத்தப்பட்டன. அதன் பின் ’T' வடிவிலான அந்த கட்டிடத்தை திட்டமிட்டபடி 62 மீட்டர் தூரத்திற்கு நகர்த்தும் பணி கடந்த 18 நாட்களாக நடைபெற்றது.
இதையடுத்து, பள்ளிக்கூட கட்டிடம் எவ்வித பாதிப்பும் இன்றி வெற்றிகரமாக வெறு இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த சவாலான பணியை மேற்கொண்ட ஷாங்காய் இவலுயேசன் நிறுவனத்தின் பொறியியல் துறையினர் வெற்றிகரமாக செய்து முடித்தனர். அவர்களை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.