'இனிமேல் இங்கேயும் 'மெட்ரோ ரயில்' வரும்'...'புதிய மெட்ரோ சேவை'...எதிர்பார்ப்பில் சென்னை மக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Nov 13, 2019 08:39 AM
சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக சென்னை மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது. பரங்கிமலை-சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை- விமானநிலையம் ஆகிய வழித்தடங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. மெட்ரோ சேவைகள் பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதனை சென்னை முழுவதும் விரிவுபடுத்தும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து இரண்டாவது கட்டமாக ரயில் பாதையை விரிவுபடுத்தும் பணிகளுக்கான திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்தவகையில் சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான திட்டமதிப்பீடு மூவாயிரத்து 500 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வரும் 2021-ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும், அதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மொத்தம் 15.3 கி.மீ தூரம் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை ரயில் பாதையானது மெட்ரோ நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 1.2 கிலோமீட்டர் இடைவெளியில், 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. பல்லாவரம், குரோம்பேட்டை, திரு.வி.க நகர், தாம்பரம், இரும்புலியூர், பெருங்களத்தூர், ஆர்.எம்.கே.நகர், வண்டலூர், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிளாம்பாக்கம் உள்பட 13 ரயில் நிலையங்கள் இதில் அடக்கம்.
இதனிடையே தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அதிகமான கல்லூரிகள் உள்ளன. இதனால் பெரும்பாலான மாணவர்கள் சென்னை மின்சார ரயிலினை தங்களின் பயணத்திற்காக பயன்படுத்துகிறார்கள். இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் பட்சத்தில் அது மக்களிடம் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக உயர்மட்ட பாதையில் இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.