இது பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் முயற்சி.. ஓபிஎஸ் ஆவேசம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Velmurugan P | Nov 27, 2021 01:27 PM

சென்னை: வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து "அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்கும்" முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால், அதனை அஇஅதிமுக கடுமையாக எதிர்க்கும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.OPS on the public distribution system in Tamilnadu

OPS on the public distribution system in Tamilnadu

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:  "நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதனகத் தாப்படும்"; "உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்"; "மின் சேமிப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மானிய விலையில் மூன்று LED பல்புதன் வழங்கப்படும்"; "எல்லாப் பொருட்களும் பாக்கெட்டுகளில் வழங்கப்படும்" என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க. அரசு, வருமான வரி செலுத்துவோரின் விவரங்களை அவர்களின் ஆதார் எண்ணுடன் வழங்குமாறு வருமான வரித் துறையினை உணவுத் துறை வாயிலாக கேட்டுள்ளது 'அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம்' என்பதை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி நியாய விலைக் கடைகள் மூலம் பொருட்களை வழங்கி வரும் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் தான் விலையில்லா அரிசி அல்லது கோதுமை குடும்ப அட்டைதாரிகள் அனைவருக்கும் வழங்கப்பபட்டு வருகிறது. இது தவிர, சர்க்கரை, துவரம்பருப்பு ஆகிய பொருட்களும் மானிய விலையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் இரண்டு கோடியே இருபது இலட்சம் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. தமிழ்நாட்டில் நடைமுறையில் இருப்பது 'அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம்', அதாவது, Universal Public Distribution System, அதே சமயத்தில் மற்ற மாநிலங்களில் நடைமுறையில் இருப்பது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டம்', அதாவது Targetted Public Distribution System. இதன்படி, முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டும் ஒரு நபருக்கு, ஒரு மாதத்திற்கு, ஒரு கிலோ அரிசி மூன்று ரூபாய் என்ற வீதத்தில் ஐந்து கிலோ அரிசி பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் இந்தச் சட்டத்தின்படி, மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை ஊரக மக்கள் தொகையில் 75 விழுக்காட்டிற்கும், நகர்ப்புற மக்கள் தொகையில் 50 விழுக்காட்டிற்கும் மேல் செல்லக்கூடாது. இதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டிற்கு அரிசியை மத்திய அரசு வழங்குகிறது. இந்த அரிசி போதுமானதாக இல்லை என்பதால், தமிழ்நாடு அரசு வெளிச் சந்தையிலிருந்து தனது சொந்த நிதி மூலமாக அதிக விலை கொடுத்து வாங்கி மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் உள்ள பயனாளிகளைக் குறைக்கும் பொருட்டு, வருமான வரி விவரங்களை தமிழ்நாடு அரசின் உணவுத் துறை கேட்கிறதோ என்ற எண்ணம் தற்போது மக்கள் மத்தியில் நிலவுகிறது.

இது குறித்து உணவுத் துறை அதிகாரியிடம் கேட்டபோது, எரிவாயு உருளைக்கான மானியத்தை வசதி படைத்தவர்கள் விட்டுத்தர வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்தபோது, இலட்சக்கணக்கானோர் விட்டுத் தந்தனர் என்றும், ஆனால் அதே வசதி படைத்தவர்கள் நியாய விலைக் கடைகளில் பொருட்களை வாங்கவில்லை என்றாலும், அந்த உரிமையை விட்டுத் தர மறுக்கிறார்கள் என்றும், இதன் காரணமாக முறைகேடு தொடர்கிறது என்றும், இதனைத் தடுக்கவே வருமான வரித் துறை செலுத்துபவர் விவரங்களை ஆதார் எண்ணுடன் வழங்குமாறு கேட்டிருப்பதாகவும், அது வந்த பிறகு வசதி படைத்தவர்களை விட்டுத் தருமாறு வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் என்று பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

 

நியாய விலைக் கடைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதே சமயத்தில், வருமானத்தின் அடிப்படையில், பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நோக்கத்தையே சீர்குலைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஐந்து இலட்சம் ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் இருப்பவர்கள் எல்லாம் வருமான வரி வரம்பிற்குள் வந்து விடுவார்கள். ஒரு குடும்பத்தின் தலைவர் வருமான வரி செலுத்துபவராக இருந்தாலும், அவரை நம்பி எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்? அவருடைய பின்னணி என்ன? அவரால் வெளிச் சந்தையிலிருந்து பொருட்களை வாங்கி குடும்பத்தை நடத்த இயலுமா? என்பதையெல்லாம் ஆராய வேண்டும். இது முற்றிலும் நடைமுறைக்கு ஒவ்வாது.

மத்திய அரசு எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகையை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை துவக்கும்போது, வசதி படைத்தவர்கள் மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பொதுவாக வேண்டுகோள் விடுத்ததே தவிர, வருமான வரி செலுத்துவோர் விவரங்களின் அடிப்படையில் வேண்டுகோள் வைக்கவில்லை. உண்மையிலேயே, வசதி படைத்தவர்கள் நியாய விலைக் கடைகளில் பொருட்களை வாங்குவதை விட்டுத் தர வேண்டுமென்றால், பொதுவான ஒரு வேண்டுகோளை அரசின் சார்பில் வெளியிடுவதுதான் பொருத்தமாக இருக்குமே தவிர, வருமான வரி செலுத்துவோரின் விவரங்களைப் பெற்று அதன் அடிப்படையில் அவர்களை வலியுறுத்துவது என்பது மக்களின் விருப்பத்திற்கு எதிரான செயல். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் உதவியாளர்களாகவும், கடைநிலை ஊழியர்களாகவும் தான் பணியாற்றுகிறார்கள். இவர்கள் எல்லாம் நீண்ட நாட்களாக பணியில் இருப்பதான் காரணமாக அவர்கள் வருமான வரி செலுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் மிக மிகக் குறைவு. இதில், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பணிப் பாதுகாப்பு என்பதே இல்லாத சூழ்நிலை உள்ளது. இவர்கள் எல்லாம் வருமான வரி செலுத்துகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து, அவர்களை எல்லாம் வசதி படைத்தவர்களாக கருத முடியாது. தமிழ்நாடு அரசின் இதுபோன்றதொரு முயற்சி ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

'ஒரே நாடு, ஒரே ரேஷன்' என்ற திட்டத்தை எதிர்த்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின்.  அவ்வாறு எதிர்த்ததற்கான காரணங்களில் முக்கியமான ஒன்று அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுவதுதான். ஏனெனில் பிற மாநிலங்களில் இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டம் தான் பின்பற்றப்படுகிறது. இதன்மூலம் முன்னுரிமை பெற்றவர்கள் மட்டுமே பயனடைய முடியும். ஆனால் தற்போது தமிழ்நாடு அரசின் உணவுத் துறை எடுக்கும் நடவடிக்கையைப் பார்த்தால், ஒரு வேளை தமிழ்நாடு அரசு அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நோக்கத்திலிருந்து தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டத்திற்கு திசை மாறுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பொதுவான வேண்டுகோளின் அடிப்படையில் வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து ரேஷன் பொருட்களை விட்டுத்தர முன்வந்தால் அதில் யாருக்கும் எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை. அதே சமயத்தில் வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டால் அதனை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்பது தொடர்ந்து செயல்படுத்தப்படுவதையும், அரசின் செலவினத்தை மிச்சப்படுத்துவதற்காக பயனாளிகளின் எண்ணிக்கையை வருமானத்தின் அடிப்படையில் குறைத்து இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டமாக மாற்றும் முயற்சி தடுத்து நிறுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" இவ்வாறு ஓ பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. OPS on the public distribution system in Tamilnadu | Tamil Nadu News.