கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்.. சிபிஎஸ்இயை வெளுத்து வாங்கிய ஓ பன்னீர்செல்வம்! என்ன காரணம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Velmurugan P | Dec 14, 2021 09:52 AM

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு முதலாம் பருவத் தேர்வுக்கான ஆங்கில வினாத்தாளில் பெண் விடுதலைக்கு எதிரான சொற்றொடர்கள் இடம்பெற்று இருப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

o paneerselvam statement about cbse 10th question paper

முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமாக ஓ பன்னீர்செல்வம்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:  " 'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்" என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க, பெண்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு சட்டங்களை இயற்றியதன் விளைவாக, பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவதோடு, நாட்டையும் ஆளுகின்ற நிலைக்கு முன்னேறியிருக்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச பாரதி விழாவில் கலந்து கொண்டு பேசிய  பாரதப் பிரதமர் மோடி, மகாகவி பாரதியாரின் தொலைநோக்கு பார்வைகளில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது மிக முக்கியமானது என்றும், பெண்கள் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் என்ற மகாகவியின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு மகளிரை கௌரவிக்கும் நடவடிக்கைகளை, பெண்ணுரிமைக்கு முக்கியத்துவம் தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும், முப்படைகளில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றிருப்பதாகவும், முத்ரா யோஜனா' திட்டம் உள்ளிட்ட பலத் திட்டங்களின் மூலம் 15 கோடி மகளிர் தொழில் முனைவோர்களுக்கு நிதி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும், தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் பாதுகாப்புத் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், மகளிர் கமாண்டோ படை என பல திட்டங்களை பெண்களுக்காக அளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார். தமிழ்நாடு உள்பட அனைத்து மாநில அரசுகளும் பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து

வருகின்றன.

o paneerselvam statement about cbse 10th question paper

இந்தச் சூழ்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு முதலாம் பருவத் தேர்வுக்கான ஆங்கில வினாத்தாளில் பெண் விடுதலைக்கு எதிரான சொற்றொடர்கள் இடம்பெற்று இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அதாவது, குழந்தைகளிடையே ஒழுக்கமின்மை நிலவுவதற்கும், சமூகப் பிரச்சனைகளுக்கும் பெண் விடுதலைதான் காரணம் என்பது போன்ற வாக்கியங்கள் அந்த வினாத்தாளில் இடம் பெற்றிருந்ததாகவும். அதற்கு விடைகளாக "எழுத்தாளர் ஓர் ஆண் பேரினவாத நபர்" மற்றும் "எழுத்தாளர் வாழ்க்கையை இலகுவாக அணுகுகிறார்" இரண்டு விடைகள் என கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு மாணவ, மாணவியர் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தக் கேள்வி பெண் விடுதலையை அவமதிப்பதோடு, பெண் விடுதலைக்காக பாடுபட்டவர்களை, பாடுபட்டுக் கொண்டிருப்பவர்களை இழிவுபடுத்துவம் வகையிலும் அமைந்துள்ளது. பாரதி கண்ட கனவை நசுக்கும் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது.

o paneerselvam statement about cbse 10th question paper

பெண்ணுக்கு எதிரான இத்தகையக் கருத்துக்கள் ஆசிரியர்கள், மாணவர்கள்: மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு மத்திய, மாநில் அரசாங்கங்களின் கொள்கைகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளது. மட்டுமல்லாமல், படிக்கின்ற இது மாணவ மாணவிகளிடையேயும் ஒருவிதமான குழப்பத்தையும், பேதத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. தற்போது அந்த வினா நீக்கப்பட்டு, அந்த வினாவிற்கான முழு மதிப்பெண் அனைவருக்கும் வழங்கப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்து இருக்கிறது. இது கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதைப் போல் உள்ளது.

தேர்வுக்கான வினாத் தாள்களை தயார் செய்வதற்கு சமுதாயத்திற்கு எதிரான கருத்துகள், சர்ச்சைக்குரிய கருத்துகள், கலவரத்தை முன்பு, தூண்டும் வகையிலான கருத்துகள் இடம் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையை வினாத்தாள் தயாரிப்பவர்களுக்கு வழங்க வேண்டிய கடமையும், அதற்கேற்ப வினாத்தாள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு உண்டு.

o paneerselvam statement about cbse 10th question paper

எனவே, இது குறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தீர விசாரணை நடத்தி, தவறு இழைத்தோர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : #O PANEERSELVAM #சிபிஎஸ்இ #ஓ பன்னீர்செல்வம் #CBSE #10TH QUESTION PAPER #பெண் விடுதலை #அதிமுக

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. O paneerselvam statement about cbse 10th question paper | Tamil Nadu News.