அதிமுக தலைமையிடம் இருந்து திடீரென இரவில் வந்த நீக்க அறிவிப்பு.. திமுக செல்கிறாரா அன்வர் ராஜா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவின் செயலருமான அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார். இவர் திமுகவில் இணையலாம் என்ற தகவல் உலா வருகிறது.
நேற்று இரவு 10.45 மணி அளவில் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி, அ. அன்வர்ராஜா சிறுபான்மையினர் நலப் பிரிவின் செயலர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அன்வர் ராஜா யார்-
1972-ல் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வைத் தொடங்கியதில் இருந்து அக்கட்சியில் இருந்தவர் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர் என்று பெயர் எடுத்தவர். அ.தி.மு.க என்றைக்கு பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததோ அன்று முதலே கட்சித் தலைமை மீது வருத்தத்தில் இருந்து வந்தார் அன்வர் ராஜா.
அதிமுக ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, "யாராவது பேச விரும்பினால் பேசலாம்" என்று கட்சியின் இணை ஒருஙகிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதன்படியே பேசுவதற்கு அன்வர் ராஜா எழுந்தார். அப்போது சடாரென எழுந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அன்வர் ராஜாவை ஒருமையில் பேசியதாக தகவல்கள் வெளியானது. அதை ஊடகத்திலும் கூறி ஒருஙகிணைப்பாளர்களை திட்டித்தீர்த்தார். இந்தச் சூழலில் டிசம்பர் ஒன்றாம் தேதி(இன்று) அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடந்து வருகிறது. செயற்குழுக் கூட்டத்தில் வேண்டாத விஷயங்களை பேசுவாரோ என்ற எண்ணத்தால் அ.தி.மு.க தலைமை திடீரென நவம்பர் 30(நேற்று) இரவு 11 மணியளவில் அன்வர் ராஜாவை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டது. .
அதிமுக தரப்பினரோ அன்வர் ராஜா, தி.மு.க-வில் இணைவதற்கு பேசிக்கொண்டு இப்படி பேசிக்கொண்டு இருந்ததாக குற்றம்சாட்டுகின்றனர். அவர் திமுகவில் விரைவில் இணைவார் என்று கூறுகிறார்கள். அதேநேரம் அன்வர் ராஜா, கட்சியில் இருந்து தன்னை நீக்கியதை நினைத்து வேதனையில் உள்ளாராம். அடுத்தக்கட்ட நடவைக்கை குறித்து அன்வர் ராஜா தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.