MLA நிதி எங்கே.. விசாரித்த போது எனக்கு கிடைத்த தகவல் .. பாய்ந்த எடப்பாடி பழனிசாமி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Velmurugan P | Dec 02, 2021 04:45 PM

சென்னை: 2021-2022-ஆம் ஆண்டுக்கான  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை உடனே விடுவிக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

TN Leader Opposition Edappadi Palanisamy on mla fund

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:  "சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளில் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளைக் கண்டறிந்து அதனை செயல்படுத்துவதற்காக,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. TN Leader Opposition Edappadi Palanisamy on mla fund

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையான கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து, அப்பணிகளை இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்திட பரிந்துரை செய்திடுவார்கள்.  இத்திட்டம் 234 தொகுதிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2016-2017ஆம் ஆண்டு வரை 2 கோடி ரூபாயாக இருந்த சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை மாண்புமிகு அம்மாவின் அரசு 2017-2018ஆம் ஆண்டு முதல் 2.50 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கியது.  2020-2021ஆம் ஆண்டு இந்நிதியினை மேலும் உயர்த்தி 3 கோடி ரூபாயாக அறிவித்தது அம்மாவின் அரசு.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களிலேயே விடுவிக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள்

தங்கள் தொகுதி மக்களிடம் கோரிக்கைகளை நேரடியாகப் பெற்று உடனடியாக, தங்கள் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை அந்தந்த ஆண்டுக்குள் நிறைவேற்றுவார்கள். இந்த ஆண்டு, டிசம்பர் மாதமே பிறந்து விட்டது.  ஆனால், 2021-2022ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை இந்த விடியா அரசு இதுவரை விடுவிக்கவில்லை. 

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஏன் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்று விசாரித்ததில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளதாகவும், இச்சமயத்தில், தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவித்தால், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இந்நிதியினை பயன்படுத்தி, தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து விடுவார்கள்.  இதனால், ஆளும் கட்சியினரின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தில் இதுவரை இந்நிதியினை விடுவிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளன. 

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் பற்றிய விவரங்களை, அந்தந்த தொகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சிப் பிரமுகர்கள், நேரடியாக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் வழங்குகின்றனர். அரசும் இந்தப் பணிகளுக்கு   ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற பல அரசு துறைகளின் நிதியினை ஒதுக்கீடு செய்கிறது. இந்நிதியை வைத்து மாவட்ட அதிகாரிகள் பூமி பூஜை, திறப்பு விழா போன்றவற்றை இப்பகுதியினைச் சேர்ந்த ஆளும் கட்சியினரை வைத்தே செய்து வருகின்றனர்.  இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை அதிகாரிகள் அழைப்பதில்லை.  இந்நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களைக் கூட அதிகாரிகள் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது இல்லை.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்திற்குள் விடுவிக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தும் இந்த திமுக அரசு இதுவரை விடுவிக்காமல் இருப்பது, இந்த அரசின் தீய எண்ணத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

 

ஏற்கனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில்,

திமுக-வினரின் அராஜகங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அதிகாரிகளின் துணையுடன் தேர்தல் முடிவுகளை அவர்களுக்கு சாதகமாக்கியது குறித்த விவரங்களை மேதகு ஆளுநரிடம் புகார் அளித்திருந்தோம்.

எங்களது புகார் உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம், அரசு அதிகாரிகள் எப்படி ஒருதலைபட்சமாக செயல்பட்டார்கள் என்று கடந்த வாரம் நடந்து முடிந்த ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்கான (மறைமுக) தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற திமுக-வைச் சேர்ந்த போட்டி வேட்பாளர்களே வெளிப்படையாக ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளனர்.  திமுக-வைச் சேர்ந்த போட்டி வேட்பாளர்களின் இந்தக் குற்றச்சாட்டு, இந்த விடியா அரசு ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நடத்திய ஜனநாயக படுகொலையை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.

இப்போது, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியினை விடுவிக்காமல், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகக் கடமையாற்ற வாய்ப்பளிக்காத, மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த திமுக அரசு, இத்தகைய செயல்களின் மூலம், தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும், ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அதிகாரிகளின் துணையுடன் வெற்றி பெற, இந்த விடியா அரசு திட்டமிட்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. எனவே, இனியும் தாமதம் செய்யாமல் 2021-2022ஆம் ஆண்டுக்குரிய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

Tags : #EDAPPADI PALANISAMY #MLA FUND #எடப்பாடி பழனிசாமி #எம்எல்ஏ நிதி #எம்எல்ஏ நிதி குறித்து எடப்பாடி பழனிசாமி #எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி #அதிமுக #ஸ்டாலின் #MK STALIN #AIADMK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN Leader Opposition Edappadi Palanisamy on mla fund | Tamil Nadu News.