‘அவர்கள் போலவே இருக்கறதுனால’... ‘எங்களுக்கு அச்சுறுத்தலா இருக்கு’... ‘சென்னையில் பரபரப்பு புகார்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 21, 2020 12:42 AM

சென்னையில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

North East Association Given a Complaint for intimidation

கொரோனா வைரஸ் முதன்முறையாக சீனாவிலிருந்து பரவத் தொடங்கியதால், உருவத்தில் சீனர்களைப் போலவே இருக்கும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் தவறாகவும், இனப் பாகுபாட்டுடனும் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சென்னையிலுள்ள வடகிழக்கு இந்திய நலச் சங்க நிர்வாகிகள் இன்று (மார்ச் 20) சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இந்தப் புகார் மனுவில், “வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் உருவத்தில் சீனர்களைப் போலவே இருப்பதால் அவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். ஆகையால், டெல்லியில் வழங்கப்பட்டதைப் போலவே சென்னையிலும் வடகிழக்கு மக்களுக்கு உரிய உதவி வழங்கி 24 மணி நேர அவசர உதவி எண் வழங்கும்படி கோரிக்கை விடுக்கிறோம்” என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

சென்னையிலுள்ள வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள் ஏற்கெனவே விடுதிகளை விட்டு வெளியேறும்படி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டதாகவும், சொந்த வீட்டிற்கோ, தெரிந்தவர்களின் வீட்டிற்கோ போகும்படி துரத்தப்படுவதாகவும் சங்கத்தின் சார்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உணவு தரப்படாவிட்டாலும் விடுதிகளில் தங்குவதற்கு மட்டும் உதவும்படி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில்  கல்லூரி, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கி பயின்று வரும் வடகிழக்கு மாநில மாணவர்கள் வீட்டிற்கு திரும்பி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் ரயில் சேவையும் விமான சேவையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த பிரச்சினை தீரும் வரை வடகிழக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சென்னையிலேயே தங்குவதற்கு உரிய ஆவணம் செய்ய அரசு முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இங்கு பணிபுரியும் பெரும்பான்மையான வடகிழக்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் உணவு விடுதிகளிலும் மால்களிலும் சில்லரை விற்பனை நிலையங்களிலும் சொற்ப ஊதியத்திற்கு உரிய  பணிபாதுகாப்பு இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். தற்போது தொடர் விடுமுறையில் அறிவிக்கப்பட்டதால் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்தும் அரசு கவனத்திற்கு எடுத்து செல்ல காவல் ஆணையர் உதவ வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை ஆணையர் ஏ.கே விஷ்வநாதன், வடகிழக்கு மாநில மாணவர்கள் மற்றும் பணிபுரிபவர்களை யாரேனும் கேலி கிண்டல் செய்தால் வடமாநிலத்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் கேலி கிண்டல் செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags : #TAMILNADUPOLICE #COMMISSIONER