"குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடனும்.. 4000 கோடி கடன் கொடுங்க"..ரிசர்வ் வங்கிக்கு சென்ற நபர்.. திகைத்துப்போன அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அதனால் தேர்தல் செலவுகளுக்காக 4809 கோடி ரூபாய் கடன் வழங்கும்படியும் ரிசர்வ் வங்கிக்கு மனு கொடுத்துள்ளார் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர்.

குடியரசு தலைவர் தேர்தல்
இந்தியாவின் தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.இதனையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளாராக அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.
சம்பளம் வேண்டாம்
நாமக்கல் அருகே உள்ள செல்லப்பன்பட்டியைச் சேர்ந்தவர் காந்தியவாதி ரமேஷ். அடிப்படையில் காந்தியவாதியான இவர், பல்வேறு சமூக நலத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும், அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி என்ற பெயரில் கட்சி ஒன்றை தொடங்கி அதன் நிறுவன தலைவராக இருக்கிறார். இவர் சமீபத்தில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அப்போது பேசிய ரமேஷ்,"இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசு தலைவர்தான். அதனால் இந்த பதவிக்கு போட்டியிடுகிறேன். இந்த பதவிக்கு நான் தேர்வானால் சம்பளம் பெறாமல் 5 ஆண்டுகளுக்கும் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் முன்மாதிரி குடிமகனாக இருப்பேன் என மனதார உறுதி அளிக்கிறேன்" என்றார்.
கடன் வேண்டும்
இந்நிலையில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு நேற்று வந்த ரமேஷ் வித்தியாசமான கோரிக்கையை அதிகாரிகளிடம் முன்வைத்திருக்கிறார். குடியரசு தேர்தலில் தான் போட்டியிடுவதாகவும் தேர்தல் செலவுகளுக்காக தனக்கு 4,809 கோடி கடன் வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் ரமேஷ்.
தன்னுடைய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றை வைத்து வட்டியில்லா கடனாகவோ அல்லது மானியமாகவோ இந்த தொகையை வழங்கிட வேண்டும் என ரமேஷ் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
குடியரசு தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அதனால் தனக்கு 4,809 கோடி ரூபாய் கடன் வேண்டும் என நாமக்கல்லை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரிசர்வ் வங்கியில் மனு அளித்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மற்ற செய்திகள்
