'மத்திய அமைச்சரை காணவில்லை...' 'போஸ்டர்' ஒட்டிய 'எதிர்க்கட்சியினர்...' "நாங்கள் ஊரடங்கு சட்டத்தை மதிப்பவர்கள்..." 'அமைச்சரின் அசத்தல் பதில்...'
முகப்பு > செய்திகள் > இந்தியா'பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர், ஸ்மிருதி இரானியை காணவில்லை' என, அவருடைய லோக்சபா தொகுதியான, உத்தர பிரதேசத்தின் அமேதியில், 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டுள்ளதாக, காங்கிரஸ் வெளியிட்ட செய்திக்கு, அவர் தகுந்த பதிலடியைக் கொடுத்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தோற்கடித்து அமேதி தொகுதியில், பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகத் திகழ்ந்த அமேதி தொகுதியில் ராகுல் தோல்வியடைந்தது காங்கிரசின் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ், மகளிர் அணி சார்பில், சமூக வலைதளத்தில், ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'தொகுதி பக்கமே தலைகாட்டாத, ஸ்மிருதி இரானியை காணவில்லை என்று, தொகுதியில் பல இடங்களில், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. 'கடந்த, இரண்டு ஆண்டுகளில், இரண்டு நாட்களில், அதுவும் சில மணி நேரங்களே அவர் தொகுதிக்கு வந்துள்ளார்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு, ஸ்மிருதி இரானி சமூக வலைதளம் மூலம் பதில் அளித்துள்ளார். அதில் "இது காங்கிரஸ் கட்சியின் மோசமான அரசியல் நாடகத்தையே வெளிகாட்டுகிறது. கடந்த, எட்டு மாதங்களில், 10 முறை, 14 நாட்கள் தொகுதிக்கு நான் சென்றுள்ளேன். ஊரடங்கு காலத்தில், என் தொகுதியைச் சேர்ந்த, 22 ஆயிரத்து,150 பேர் பஸ்கள் மூலமும், 8,322 பேர் ரயில்கள் மூலமும் திரும்புவதற்கு உதவி செய்துள்ளேன். அவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட நான் தயார்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஊரடங்கு அமலில் உள்ளதால், அதை மதித்து, நான் தொகுதிக்கு செல்லவில்லை. நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்க விரும்பவில்லை." என்றும் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.