'நள்ளிரவில் பரிதவித்த இளம்பெண்'... ‘காவலரு’க்கு குவியும் பாராட்டுக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Jul 28, 2019 12:13 PM
சென்னையில் நள்ளிரவு நேரத்தில் பனிக்குடம் உடைந்து, பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு சரியான நேரத்தில் சென்று உதவிய பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
சென்னை தலைமைச் செயலக காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கே.எச் சாலை அருகே செல்லும்போது ஒரு வயதான பெண் தனியாக நின்று அழுது கொண்டிருந்தார். காவல் ஆய்வாளர் அருகில் சென்று விசாரித்தபோது, அவரின் பெண்ணான ஷீலாவுக்கு, தலைப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வாகனம் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்க, மெயின் ரோட்டுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நம்மாழ்வார் பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, அங்கு பனிக்குடம் உடைந்த நிலையில் பிரசவ வலியில் அந்தப் பெண் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வர செய்துள்ளார். ஆனால் அந்தத் தெருவுக்குள் 108 ஆம்புலன்ஸ் வர இயலாத காரணத்தால், இவரது போலீஸ் வாகனத்தில் ஷீலாவை ஏற்றிக்கொண்டு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று, அங்கு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, அதிகாலை 3.15 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது. சரியான நேரத்தில் செய்த உதவிக்காக காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.