'பங்க் குமார், வெள்ளை ரவி, பவாரியா கும்பலை'...தெறிக்க விட்ட 'ரியல் தீரன்'... இன்றுடன் விடை பெறுகிறார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jul 31, 2019 02:29 PM

ரவுடிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய காவல்துறை அதிகாரி என பெயர் பெற்ற  எஸ்.ஆர்.ஜாங்கிட் ஐபிஎஸ் இன்றுடன் தனது காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

Real Theeran DGP SR Jangid IPS to retire today

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில், 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, விவசாய குடும்பத்தில் பிறந்த சங்காராம் ஜாங்கிட் முதுகலை பொருளாதாரம் படித்தார். காவல்துறை பணிக்கு வருவதற்கு முன்பு அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அதன் பின்பு குடிமை பணி தேர்வில் வெற்றி பெற்ற ஜாங்கிட், 1985ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவில் தேர்வானார். இதையடுத்து தமிழக காவல்துறையில் சேர்ந்த ஜாங்கிட், பயிற்சிக்கு பின்பு அம்பாசமுத்திரத்தில் உதவி எஸ்பியாக பணியமர்த்தப்பட்டார். தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவி கிடந்த ஜாதி கலவரங்களை திறம்பட கையாண்டு மக்களின் நன் மதிப்பினை பெற்றார்.

அதன் பின்பு நீலகிரி, கடலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஜாங்கிட், பதவி உயர்வு பெற்று மதுரை, நெல்லை, தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி'யாகவும், நெல்லை, மதுரை காவல் ஆணையாளராகவும் பணியாற்றினார். அவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் ரௌடியிசத்தை கட்டுக்குள் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்பு ஐஜி'யாக பணி உயர்வு பெற்ற அவர், சென்னை மாநகர கூடுதல் ஆணையாளராக பணியாற்றினார். அப்போது தான் சென்னையை கலக்கிய பிரபல ரௌடிகளான பங்க் குமார், வெள்ளை ரவி ஆகியோர் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள். அதே போன்று சென்னையை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட, சென்னை புறநகர் பகுதியின் முதல் ஆணையாளர் என்ற பெருமையும் ஜாங்கிட்டை சாரும்.

இவர் வடக்கு மண்டல, ஐ.ஜி.,யாக இருந்தபோது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த  பவாரியா கொள்ளை கும்பலை கூண்டோடு அளித்து, தமிழக மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்தார். எந்த ஒரு தடயமும் இல்லாமல், கைரேகை ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு, பல மாதங்கள் ராஜஸ்தானிலேயே முகாமிட்டு பவாரியா கொள்ளை கும்பலை கூண்டோடு பிடித்தார். இவரது சாதனையை விளக்கும் வகையில், கார்த்தி நடித்த‘‘தீரன் அதிகாரம் ஒன்று'' என்ற பெயரில் திரைப்படமாக வந்தது குறிப்பிடத்தக்கது.

காவல் பணியில் கண்டிப்பு என்பது மட்டுமல்லாமல், பல முன்னோடி திட்டங்களை கொண்டு வந்து காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தினார். குறிப்பாக தலைவர்களின் சிலைகளை உடைத்து அவ்வப்போது கலவரங்கள் வெடித்தன. இதனை தடுப்பதற்காக தலைவர்களின் சிலைகளுக்கு இரும்பு கம்பிகளை கொண்டு கூண்டு அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். காவல் உதவி மையம், காவல் நிலையத்தில் பெண் காவலர்களை வரவேற்பாளர்களாக நியமித்தது, காவல்துறையில் இருக்கும் காவலர்களின் விளையாட்டு திறனை வெளிக்கொண்டு வந்தது போன்ற, பல்வேறு முன்னோடி திட்டங்களை  செயல்படுத்தினார்.

காவல்துறையில் அடிமட்டத்தில் இருக்கும் காவலர்களின் பிரச்சனைகளை அறிந்து, அதற்கு உடனடி தீர்வினை அளித்தது காவலர்கள் மத்தியில் ஜாங்கிட்டின் மதிப்பினை மென்மேலும் உயர்த்தியது. தென் மாவட்டங்களில் குறிப்பாக ''தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி  பகுதிகளில் ''அந்த மீசை காரரை மறக்கமுடியுமா'' என இன்றும் மக்கள் சொல்லும் அளவிற்கு, தனது சிறப்பான பணியின் மூலம் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார்.

துப்பாக்கி சுடுதலில் வல்லவரான ஜாங்கிட், தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பல பதக்கங்களை வென்றுள்ளார். 34 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றியுள்ள ஜாங்கிட், சிறந்த சேவைக்காக இரண்டு முறை குடியரசுத்தலைவர் பதக்கமும், ஒரு முறை பிரதமர் பதக்கமும், மெச்சத்தகுந்த பணிக்காக இரண்டு முறை தமிழக முதல்வரின் பதக்கமும் பெற்றுள்ளார்.

ஜாங்கிட்டின் சீரிய பணியினை பாராட்டி 'பிஹைண்ட்வுட்ஸ்' சார்பில் அவருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. டி.ஜி.பி'யாக பதவி உயர்வு பெற்ற ஜாங்கிட் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக ஊழல் தடுப்பு ‌மற்றும் கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றினார். இந்நிலையில் இன்றுடன் தனது காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெரும் ஜாங்கிட், காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் ஆற்றிய பணி என்பது அளப்பரியது.

Tags : #POLICE #KARTHI #S. R. JANGID IPS #DGP #BAVARIA GANG #DHEERAN ADHIGARAM ONDRU