'ராகுல் உயிருக்கு அச்சுறுத்தல்'?...'ஸ்நைப்பர் துப்பாக்கி' மூலம் குறியா?...அதிர்ச்சியை கிளப்பும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Apr 12, 2019 09:55 AM
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அக்கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே 'எஸ்பிஜி' எனப்படும் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும்.அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனிடையே ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குறைபாடுகள் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான அஹ்மத் படேல், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ரண்டீப் சுர்ஜேவலா ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புகார் அளித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் என முதல்முறையாக 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் அவர், கடந்த 4 -ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.இதைத்தொடர்ந்து, நேற்றைய தினம் அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதற்காக, திறந்த வாகனத்தில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவில் அவரது நெற்றியில் பச்சை நிறத்தில் ஒளி அடிக்கடி பட்டு மறைந்தது. பச்சை நிறத்திலான அந்த லேசர் ஒளி குறைந்த நேரத்தில் 7 முறை தெரிந்ததாகவும், இதில் 2 முறை அவரது தலையில் தெரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில் ராகுலின் பாதுகாப்பு குறித்த வீடியோவையும் இணைத்துள்ளனர்.மேலும் ஸ்நைப்பர் துப்பாக்கி மூலம் குறிவைக்கப் பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பதிலளித்த உள்துறை அமைச்சகம், சிறப்பு பாதுகாப்பு படையினரிடம் ஆலோசனை மேற்கொண்டதில்,அந்த ஒளியானது செல்போன் வெளிச்சத்தில் இருந்து வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், எந்த பாதுகாப்பு குறைப்பாடும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
