'கனத்த இதயத்தோடு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுறேன்...' 'துணைத் தலைவர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகினார்...' - என்ன காரணம்...?
முகப்பு > செய்திகள் > தமிழகம்2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சி, 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்டு 3.7 சதவிகித வாக்குகளை பெற்றது.
மக்களவை தேர்தலில் 3.7 சதவிகித வாக்குகளை பெற்றதால் மக்கள் நீதி மய்யத்தின் மீது தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் நீதி மய்யம் தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கிய நிலையில், அக்கட்சியின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் நினைத்ததற்கு மாறாக வெறும் 2.84 சதவிகித வாக்குகளை பெற்றது மக்கள் நீதி மய்யம் கட்சி. கமல்ஹாசன், அவர் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியில் கடைசி வரைக்கும் போராடி தோல்வியை சந்தித்தார். கமல்ஹாசனே வெற்றி பெறாதது அக்கட்சியினருக்கு மிகுந்த ஏமாற்றமாக அமைந்தது.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் தோல்விக்கான காரணம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கமல்ஹாசன், கட்சியில் தீவிர தேர்தல் பணியாற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி அவர்களாகவே வெளியேறியுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி கட்சி பதவியிலிருந்து மட்டுமல்லாது, அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகியுள்ளார். மேலும் கனத்த இதயத்தோடும், தெளிவான சிந்தனையோடும் இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும், கட்சியை சீரமைக்கும் தலைவர் கமல்ஹாசனின் செயல்திட்டத்தை முடுக்கி விடும் நோக்கத்துடனும், புதிய பொறுப்புகளை உருவாக்குவதற்காக, இதுவரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக உள்ள துணை தலைவர், பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் சந்தோஷ் பாபு, குமரவேல், மவுரியா, முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி உள்ளிட்டோரிடமிருந்து கட்சி தலைமை ராஜினாமா கடிதங்களை கேட்டுப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மற்றொரு துணைத் தலைவர் பொன்ராஜ், கட்சியை சீரமைப்பதற்கான முழு அதிகாரத்தையும், அனைத்து உரிமைகளையும் தலைவர் கமல்ஹாசனுக்கு வழங்கி, கட்சியின் தலைமை நிர்வாகிகள் 10 பேர் ராஜினாமா செய்வதாக இன்று (06-05-2021) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.