'படம் மட்டும் அல்ல பாடம்!'.. 'அசுரன்' திரைப்படம் பார்த்துவிட்டு ஸ்டாலின் போட்ட வைரல் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 17, 2019 12:24 AM

அண்மையில் தனுஷ், மஞ்சு வாரியர், கருணாஸின் மகன் கென் கருணாஸ் நடித்து, வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் திரையரங்குகளில் ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. 

MK Stalin watches \'Asuran\' movie in Thoothukudi theatre

இதனிடையே வரவிருக்கும் இடைத்தேர்தலுக்காக நாங்குநேரியில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இத்தனை வேலைகளுக்கும் நடுவில் அசுரன் திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என எண்ணியுள்ளார். 

இதற்கென அவர் தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் இரவுக்காட்சிக்காக சென்றுள்ளார். தமிழ் நிலத்தில் சாதீயத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பேசும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் சலனத்தை உண்டுபண்ணியுள்ளதாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. 

இந்த நிலையில் அசுரன் திரைப்படத்தை பார்த்த மு.க.ஸ்டாலின், ‘அசுரன்’ படம் மட்டுமல்ல பாடம் என்றும் பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என்றும் புகழ்ந்து பாராட்டியுள்ளார். 

மேலும் கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷ்-க்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறனின் முந்தைய படங்களான விசாரணை, ஆடுகளம் ஆகியவை நாவல்களில் இருந்து படமாக்கப்பட்டவை. அவை சர்வதேச விருதுகளை குவித்தன. அவ்வகையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ என்கிற  நாவலில் இருந்து திரைப்படமாக்கப்பட்ட அசுரன் திரைப்படமும் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்படலாம் என்றும் கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : #MKSTALIN #DMK #ASURAN #DHANUSH