மற்றொரு 'வுஹானாக' மாறும் 'அபாயத்திலுள்ள' நகரம்... மீண்டும் 'அதிகரிக்க' தொடங்கியுள்ள பாதிப்பால் 'அச்சம்'...
முகப்பு > செய்திகள் > உலகம்சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் மீண்டும் புதிய கொரோனா பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் இன்று புதிதாக 46 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் கொரோனோ பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 46 பேரில் 10 பேரைத் தவிர மற்றவர்கள் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய சீனர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவிலிருந்து சீனர்கள் வெளியேற்றப்பட்டு வருவதால் சீனாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக சீன – ரஷ்ய எல்லையில் உள்ள சூஃபென்ஹேயில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த நகரம் மற்றொரு வுஹானாக மாறி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். முதல்முதலாக கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அடுத்த சில மாதங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தற்போது சீனா கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டதாக கூறப்பட்ட நிலையில் வெளிநாடுகளிலிருந்து திரும்பிய சீனர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர எந்தவித அறிகுறியும் இன்றி 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை மொத்தமாக 82,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3,342 பேர் உயிரிழந்துள்ளனர். 77,816 பேர் குணமாகியுள்ளனர்.
