முன்னாடி 'குறைச்சு' கணக்கிட்டுட்டோம்... மொத்த 'பலி' எண்ணிக்கை... வெளியாகியுள்ள 'அதிரவைக்கும்' தகவல்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Apr 16, 2020 12:05 AM

நியூயார்க்கில் கணக்கிடப்பட்ட தொகையை விட மேலும் 4,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

US NewYork Corona Death Toll Soars After Counting Probable Deaths

கொரோனா பாதிப்பால் நிலைகுலைந்து போயுள்ள அமெரிக்காவில் இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 6 லட்சத்துக்கும் அதிகமானவர்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நியூயார்க்கைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. மேலும் கொரோனாவால் உயிரிழந்துள்ள 25000க்கும் அதிகமானவர்களில் 10,000க்கும் அதிகமானவர்கள் நியூயார்க்கைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக நியூயார்க்கில் சுமார் 6,500 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், நேற்று நியூயார்க் சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் மேலும் 4,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர். அவர்களில் பலருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசியுள்ள சுகாதாரத்துறை ஆணையர் ஆக்சிரிஸ் பார்போட், "கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் வேதனையானது. நாங்கள் மேலும் பாதுகாப்பாகவும் கவனத்துடனும் செயல்பட வேண்டிய முக்கியமான நேரம் இது. சமீபத்தில் உயிரிழந்த 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்றாலும் இதுபோன்ற திடீர் உயிரிழப்புகள் ஏற்பட்ட கொரோனாவைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதுதொடர்பாக பேசிய நியூயார்க் மேயரான பில் டி பிலேசியோ, கொரோனாவால் நியூயார்க்கில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கைகளைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம் எனவும், மேலும் பலர் கொரோனா பாதிப்புடன் வீட்டிலேயே இருந்து உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.