பிரசவத்தின்போது வயித்துக்குள்ள சிக்கிய பொருள்.. 12 வருஷம் கழிச்சு ஆபரேஷன்... மனித உரிமை கமிஷன் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருத்தணியை சேர்ந்த பெண்ணுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது தமிழக மனித உரிமைகள் ஆணையம்.
பிரசவம்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள வி.கே.ஆர் புரத்தை சேர்ந்தவர் பாலாஜி. தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில், அந்த பெண் கர்ப்பமடைந்திருக்கிறார். இதனையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரசவத்துக்காக திருத்தணி அரசு மருத்துவனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை மூலமாக நடைபெற்ற பிரசவத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால், அதன்பின்னர் தான் அவருடைய நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது.
பிரசவத்துக்கு பிறகும் கடுமையான வயிற்றுவலியால் அந்த பெண் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார். இதனால் அவரது கணவர் மிகுந்த கவலையடைந்திருக்கிறார். ஒருகட்டத்தில் வலி அதிகமாகவே, அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு இருக்கிறது. அப்போதுதான் முழுவிபரமும் தெரியவந்திருக்கிறது. அந்த பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோல் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக அதனை அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றனர்.
ஆபரேஷன்
இதனை தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அறுவை சிகிச்சை மூலம் அவருடைய வயிற்றில் இருந்த கத்தரிக்கோல் மருத்துவர்களால் அகற்றப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஆஜராக்கிரதையாக செயல்பட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் முதல்வருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்திருந்தார் பாலாஜி.
இதுகுறித்த செய்திகள் வெளிவந்த நிலையில், தமிழக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதுதொடர்பாக தமிழக மனித உரிமைகள் உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில் திருவள்ளூர் சுகாதார பணிகள் இணை இயக்குனர் அளித்த அறிக்கை உள்ளிட்டட ஆவணங்களை சுட்டிக்காட்டி மருத்துவரின் கவனக்குறைவால் தவறு நடைபெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதன் காரணமாகவே அந்த பெண்மணி 12 ஆண்டுகளாக வலியை அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ள ஜெயச்சந்திரன், பெண்மணிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Also Read | ISRO-க்கு அரசுப் பள்ளி மாணவர்கள் செஞ்ச முக்கிய ஹெல்ப்.. அமைச்சர் நேரில் வாழ்த்து..!