'திருமணமான பெண்ணை தூக்க ஃபிளைட் புடிச்சு போன ஆட்டோக்காரர்'... ஊருக்குள் போனதும் காத்திருந்த ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்த கோவுகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் நாகேஷ். இவரது மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சூழ்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நாகேஷின் மகள் திடீரென மாயமானார். அதன்பிறகு அவரது குடும்பத்தினர் தீவிரமாகத் தேடிய நிலையில், அந்த பெண் சென்னை சிஐடி நகரை சேர்ந்த தாமரைச் செல்வன் என்ற ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரை மீட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக வாடகைக் கார் ஒன்றில் தாமரை செல்வன் அடிக்கடி, கோவுகவுண்டம்பட்டிக்குள் வந்து சென்றுள்ளார். சம்பந்தமில்லாத கார் ஒன்று தங்கள் ஊருக்குள் சுற்றி வருவதைக் கண்டு அதனை மறித்து விசாரித்தபோது அதனுள் தாமரைச்செல்வன் இருப்பதைப் பார்த்ததும், நாகேஷின் உறவினர்கள் அவரை அடித்து உதைத்து சட்டையைக் கிழித்து காருடன் போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நாகேஷின் மகளைத் தான் காதலிப்பதாகவும் ஏற்கனவே அவரை அழைத்துச்சென்று தனது வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தியதாகவும், அவரை மீண்டும் தன்னுடன் அழைத்துச் செல்லும் திட்டத்துடன் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து வாடகைக் கார் எடுத்துக் கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தாமரை செல்வனை எச்சரித்த போலீசார், அவரை சென்னைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதையடுத்து வடமதுரை போலீசார் திண்டுக்கல்லிலிருந்து திருச்சி செல்லும் நான்கு வழிச்சாலையில் தென்னம்பட்டி பிரிவு அருகே தாமரைச் செல்வனை மடக்கிப் பிடித்து அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து தாமரை செல்வனிடம் விசாரணை நடந்து வருகின்றது. திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண்ணை அழைத்துச் சென்றதோடு, அவர் மனம் திரும்பி வந்த நிலையில் மீண்டும் அவரை அழைத்து வரச் சென்று ஊர் மக்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டது தான் மிச்சம்.

மற்ற செய்திகள்
