'நீங்க சாப்பிட்டு வாங்க... நான் பாத்துக்குறேன்!'.. மொய் பணம் வசூல் செய்த உறவினரிடம் பேச்சு கொடுத்து... மர்ம நபர் செய்த 'பகீர்' காரியம்!.. திருமண வரவேற்பில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கும்மிடிப்பூண்டி அருகே நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஊத்துக்கோட்டை மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நவீனுக்கும் ஆந்திர மாநிலம் தடாவை சேர்ந்த பிந்துக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் அன்பளிப்பு பணத்தை மணமக்களிடம் வழங்கியுள்ளனர். மணமக்கள் அதனை வாங்கி தங்களது உறவினர்களிடம் கொடுத்து வந்தனர்.
மணமேடை அருகே வந்த மர்ம நபர், தான் இரவு உணவு சாப்பிட்டு விட்டேன் நீங்கள் சாப்பிட்டு வாருங்கள் எனக்கூறி அங்கிருந்த உறவினரை அனுப்பி வைத்து விட்டு அன்பளிப்பு பணத்தை வாங்கி வைத்துள்ளார்.
சற்று நேரத்தில் அந்த மர்ம நபர் மொய் கவர்கள் அடங்கிய பையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கவரைப்பேட்டை போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு திருமண வீட்டில் சுமார் ரு.1 லட்சம் மொய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
