நீங்க செய்த 'வேலைக்கு' நான் 'ஏதாவது' பண்ணியாகணுமே...! இந்த காலத்துல 'இப்படி' ஒரு நல்ல உள்ளமா...? 'நீங்க நல்லா இருக்கணும் சார்...' - இப்படி ஒரு 'சீட்டிங்' பார்த்ததே இல்லையே...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவிய காலத்தில் தங்கள் உயிரை பணையம் வைத்து பல தன்னார்வலர்கள் சேவையை மேற்கொண்டனர்.
அதில் முக்கியமாக வடசென்னையில் இலவச ஆட்டோ ஆக்சிஜன் என்ற திட்டத்தின் மூலம் சேவை புரிந்த கடமை அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வலர் வசந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் கவனிக்க வைத்தனர். இவர்களை டாக்டர் சந்திரசேகரன் சுப்பிரமணியன் என்ற பெயரிலான நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி தொடர்பு கொண்டுள்ளார்.
தான் ஐசிஎம்ஆர் நிறுவனத்தில் கொரோனோவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் குழுவில் தலைமை ஆராய்ச்சியாளராக இருப்பதாகவும், தங்களது சமூகப் பணியை டிவியின் மூலம் தெரிந்து கொண்டதாகவும் பாராட்டியுள்ளார்.
மேலும், இலவசமாக மாஸ்க் கிருமிநாசினி போன்றவற்றை அனுப்பி வைப்பதாகவும் அவற்றை மக்களுக்கு வழங்குமாறும் அந்த நபர் கூறியதை கேட்டு அவர் உண்மையிலேயே ஐசிஎம்ஆரில் பணிபுரியக்கூடிய ஆராய்ச்சியாளர் என்று தன்னார்வலர்கள் நம்பி உள்ளனர்.
பின்னர் மீண்டும் அழைத்த சந்திரசேகர் சுப்பிரமணியன் என்ற அந்த நபர், பிரபல மகேந்திரா கார் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரியும் மருத்துவர்களுக்கு இலவசமாக 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொலிரோ வாகனத்தை வழங்குவதாகவும், தங்களது சேவையை பார்த்து வியந்துபோன தான் அந்த வாகனத்தை உங்களுக்கு பரிசாக வழங்குவதாகவும் கூறியுள்ளார். அதற்கான விவரங்களையும், பொலிரோ காரின் படத்தையும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளார். சேவை எண்ணத்துடன் ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த காரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க முன் வருகிறாரே என்று மகிழ்ச்சியடைந்த வசந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனத்தை அனுப்புவதற்கு ஒரு லட்சம் வரை வரி உட்பட சில கட்டணங்கள் செலுத்த வேண்டும் எனவும் அதற்கான வங்கி கணக்கு எண் ஒன்றை அனுப்புவதாகவும் கூறிய அந்த நபர் அதற்கான விவரங்களை எல்லாம் அனுப்பி உள்ளார். அந்த வங்கி கணக்கு எண் மகேந்திரா மெடிக்கல் பவுண்டேஷன் என்ற பெயரில் இருந்துள்ளது. அதை நம்பி முதலில் ஆயிரம் ரூபாயை அந்த வங்கி கணக்கில் வசந்தகுமார் செலுத்தியுள்ளார்.
அப்போது வங்கிகணக்கு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் கரூர் வைசியா வங்கி கிளையில் இருப்பது தெரியவந்தது. மஹிந்திரா நிறுவனத்தின் பெயரில் இருந்த அந்த வங்கி கணக்கு தொடர்பாக அவருக்கு சந்தேகம் எழுந்ததால் இணையத்தில் சரி பார்த்தபோது மஹிந்திரா நிறுவனம் இதுபோன்ற மகேந்திரா மெடிக்கல் பவுண்டேஷன் என்ற பெயரில் இயங்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் என தன்னைக் கூறிக்கொள்ளும் சந்திரசேகர சுப்பிரமணியன், தன்னார்வலர்களை மீண்டும் தொடர்பு கொண்டு, தாங்கள் அனுப்பிய ஆயிரம் ரூபாய் பணம் வந்துவிட்டதாகவும் உங்களுக்கு கொடுக்க வேண்டிய காரும் டெல்லியில் இருந்து புறப்பட்டு தற்போது பெங்களூர் வந்து அடைந்து விட்டதாகவும், முதற்கட்டமாக 27 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தினால் வாகனம் கையில் கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார்.
உஷாரான வசந்தகுமார் அதற்கு பிறகு இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்தில் தேடிய போது சந்திரசேகர சுப்பிரமணியன் பெயரில் ஒரு மருத்துவரே ஐசிஎம்ஆர் குழுவில் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த மோசடி கும்பல் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.