கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு... தடுப்பூசி தேவையில்லையா!?.. மருத்துவ வல்லுநர் குழு முக்கிய தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழு முக்கிய கருத்தை பரிந்துரைத்துள்ளது.

பிரதமரிடம் மருத்துவ வல்லுநர் குழு அளித்துள்ள அறிக்கையில், கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி சரியான பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்த பின்னர், தடுப்பூசி போடுவதை தொடங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதைக் குறிப்பிட்டுள்ள மருத்துவ வல்லுநர் குழு, அதைவிட தொற்றால் அதிக பாதிப்புக்குள்ளாவோரைக் கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அதிக தொற்றுப் பரவல் ஏற்படும் இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுபடுத்துவது அவசியம் என்றும், டெல்டா வகை தொற்றுப் பரவல் அதிகம் உள்ள இடங்களில் மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்குவதற்கான கால இடைவெளியை குறைக்கலாம் என்றும் வல்லுநர் குழு குறிப்பிட்டுள்ளது.
தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்துவதற்கான கால இடைவெளியானது 12 வாரங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அக்குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

மற்ற செய்திகள்
