ஏம்மா சோகமா இருக்கீங்க..? ‘கண்ணீர்’ மல்க பாட்டி கொடுத்த புகார்.. அடுத்த நொடியே காரில் பறந்த ‘கலெக்டர்’.. வெலவெலத்துப்போன ஹவுஸ் ஓனர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனு அளிக்க வந்த மூதாட்டிக்கு உடனடியாக உதவி செய்த மதுரை மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மதுரை கோரிப்பாளையம் வயக்காட்டு தெருவை சேர்ந்தவர் பாத்திமா சுல்தான் (80). இவர் அப்பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மக்கள் குறை தீர்க்கும் நாளான நேற்று மூதாட்டி பாத்திமா, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கையில் மனுவுடன் வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன், பரிதாபமாக அமர்ந்திருந்த மூதாட்டியை பார்த்துள்ளார். உடனே காரை நிறுத்திவிட்டு மூதாட்டியின் அருகில் சென்று விசாரித்துள்ளார்.
அப்போது வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொன்னதால் தற்போது கோரிப்பாளையம் பள்ளி வாசல் அருகே வசித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் தான் தங்கியிருந்த வீட்டுக்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை வீட்டு உரிமையாளர் தர மறுப்பதாக கூறி அழுதுள்ளார். இதனால் மூதாட்டியை ஆசுவாசப்படுத்தி அவருக்கு டீ வரவழைத்து ஆட்சியர் அன்பழகன் குடிக்க சொன்னார்.
பின்னர் ‘எப்படி வீட்டுக்கு போவீங்க?’ என அவர் கேட்டபோது, ஐயா நான் நடந்தேதான் வீட்டுக்கு போவேன்’ என மூதாட்டி பரிதாபமாக கூறியுள்ளார். இதனால் உடனடியாக தனது வாகனத்தில் மூதாட்டியை ஏற்றிக்கொண்டு அவர் வாடகைக்கு இருந்த வீட்டுக்கு அழைத்து சென்றார். மூதாட்டியின் வீட்டுக்கு ஆட்சியர் வந்ததும் அக்கம்பக்கத்தினர் அதிர்ந்து போயுள்ளனர்.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டனர். மூதாட்டிக்காக மாவட்ட ஆட்சியர் வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்த உரிமையாளர் அதிர்ந்து போயுள்ளார். அப்போது, ‘கலெக்டரே நேரில் வருவாங்கனு தெரியாது. ஒரு வாரத்துல பணத்தை திருப்பி கொடுத்துறேன்யா’ என வீட்டு உரிமையாளர் உறுதியளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தங்களது பணம் விரைவில் வந்துவிடும் என ஆட்சியர் மூதாட்டிக்கு ஆறுதல் சொல்லியுள்ளார். அப்போது மூதாட்டி தனது கஷ்டத்தை சொல்லி ஆட்சியரிடம் அழுதது, சுற்றியிருந்தவர்களையும் கண் கலங்க செய்தது. இதனை அடுத்து மூதாட்டியின் செலவுக்காக தன்னிடமிருந்த ரூ.5000 பணத்தை ஆட்சியர் கொடுத்துவிட்டு கிளம்பினார். மதுரை மாவட்ட ஆட்சியரின் இந்த செயலை மக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
