'20 ரூபாதான் இருக்கு.. ஏத்திக்குவீங்களா?'.. முன்னாள் எம்.எல்.ஏ பற்றி ஆட்டோ ஓட்டுநர் எழுதிய ‘வைரல்’ பதிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன் ஆட்டோவில் ஏறிய முன்னாள் எம்எல்ஏ குறித்து ஆட்டோ டிரைவர் எழுதிய முகநூல் பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது.
மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த பாண்டி எனும் பட்டதாரி சொந்தமாக ஆட்டோ தொழில் செய்துகொண்டிருக்கிறார். இவர் கடந்த 27-ம் தேதி காலை மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து கோரிப்பாளையம் நோக்கிச் சென்றபோது, அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து பேருந்தில் ஏற முயன்ற பெரியவர் தன்னுடைய ஒரு செருப்பைத் தவறவிட்டுவிட்டு, உடனே பேருந்தில் இருந்து இறங்கி செருப்பை தேடினார்.
அவர் மதுரையின் முன்னாள் எம்எல்ஏ என்பதை அடையாளம் கண்ட பாண்டி, அவரிடம் போய், தன் ஆட்டோவில் ஏறச் சொல்ல, அவரோ, தன்னிடம் 20 ரூபாய்தான் இருக்கு, அழைத்துக் கொண்டுபோவீர்களா? என கேட்க, சரிங்கய்யா என சொல்லி அவரை ஆட்டோவில் ஏற்றிய பாண்டி, அந்த முன்னாள் எம்எல்ஏவுடன் ஒரு செல்ஃபி எடுத்து முகநூலில் பதிவிட்டார். அத்துடன் பெரியவர் மதுரை கிழக்குத் தொகுதியில் இருமுறை எம்எல்ஏவாக இருந்த நன்மாறன் அய்யா. எளிமையான, நேர்மையான, மனிதநேயம் கொண்ட மனிதர், இவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று முகநூலில் பாண்டி எழுதியிருந்தார்.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய பாண்டி, “மதுரை முன்னாள் எம்எல்ஏ ஒருவர் தன் மகள் திருமணத்துக்குச் சீர்வரிசையாக மட்டும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களைக் கொடுத்த செய்தி பிரபலமானது. ஆனால், நன்மாறனோ 72 வயதிலும் பேருந்தில் போய்க் கொண்டிருக்கிறார். பென்ஷன் தொகை ரூ.20 ஆயிரத்தில் பாதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தில் வாழ்கிறார். எல்லாவற்றுக்கும் மேல், ஆட்டோவை விட்டு இறங்கும் வரையில் முன்னாள் எம்எல்ஏ என்பதை அவராகச் சொல்லவில்லை” என்றார்.
இதுபற்றி இந்து தமிழ் இதழிடன் கேள்விக்கு பதில் சொன்ன நன்மாறன், “இதெல்லாம் ஒரு செய்தியா போடணுமா? டெல்லி விவசாயிகள் போராட்டம் பற்றி போடுங்க” என்று கேட்டுக்கொண்டார். ஆரப்பாளையத்தில் மனைவியுடன் வசித்து வரும் நன்மாறனுக்கு 2 மகன்கள். மூத்த மகன் குணசேகரன் நாகமலை புதுக்கோட்டையில் இருக்கும் பாண்டியன் (தமிழ்நாடு) கிராம வங்கியில் பணியாற்றுகிறார். இளைய மகன் ராஜசேகரன், மதுரை அரசு மருத்துமனையில் தற்காலிகப் பணியில் இருக்கிறார்.