வாக்கு செலுத்தும் இயந்திரத்துக்கு முன்னால் சில நொடிகள் விஜய் வாக்களிக்காமல் நின்றார்.
நடிகர் விஜய்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக காலை 7 மணிக்கு நடிகர் விஜய் கிளம்புவார் என அவரது மக்கள் தொடர்பாளர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதனால் காலை 5 மணியில் இருந்தே அவரது வீட்டின் முன் ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.
சிவப்பு நிற கார்
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது விஜய் கருப்பு சிவப்பு நிற சைக்கிளில் வந்து வாக்களித்தார். அதனால் இந்த முறை விஜய் எந்த வாகனத்தை பயன்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே ஏற்பட்டது. இதனை அடுத்து இன்று (19.02.2022) காலை 7 மணியளவில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து சிவப்பு நிற காரில் விஜய் கிளம்பினார்.
சில நொடிகள் வாக்களிக்காமல் நின்ற விஜய்
நீலாங்கரை வேல்ஸ் இண்டர்நேஷ்னல் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு விஜய் வாக்கு செலுத்தச் சென்றார். அடையாள அட்டை சரிபார்ப்பு முடிந்த பின்னர் அவரது கையில் மை வைக்கப்பட்டது. அதன்பின்னர் வாக்கு செலுத்தும் இடத்துக்கு விஜய் வந்தார்.
அப்போது அவரை சுற்றி ஒளிப்பதிவாளர்கள் கூட்டம் முண்டியடித்தது. தான் யாருக்கு வாக்கு அளிக்கிறோம் என்பது கேமராவில் பதிவாகிவிடும் என்பதனால், விஜய் சில நொடிகள் வாக்களிக்காமல் நின்றார். உடனே விஜய்க்கு அருகில் நின்றவர், ஒளிப்பதிவாளர்களை நகர்ந்து செல்லுமாறு கையசைத்து வலியுறுத்தினார். இதனை அடுத்து சுற்றியிருந்தவர்கள் விலகியதும் விஜய் வாக்களித்துவிட்டு கிளம்பினார்.
விஜய் மக்கள் இயக்கம்
முன்பு நடந்த தேர்தலைகளை விடவும் இந்த தேர்தல் நடிகர் விஜய்க்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம், அவரது விஜய் மக்கள் இயக்கம் இந்த தேர்தலில் நேரடியாக போட்டியிடுகிறது. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்டவர்கள் பல இடங்களில் வெற்றி பெற்று கவனம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.