‘கவலைப்படாதீங்க’.. இனி உங்க வீட்டு ‘வாடகையை’ நான் கொடுக்குறேன்.. மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் ஆதரவின்றி தவித்த மூதாட்டியின் வீட்டு வாடகையை பள்ளி செயலாளர் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையம் வயக்காட்டு தெருவை சேர்ந்தவர் மூதாட்டி பாத்திமா சுல்தான் (80). இவர் கடந்த திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மனுவுடன் சோகமாக அமர்ந்து இருந்தார். அப்போது வந்த ஆட்சியர் அன்பழகன் இதை கவனித்து உடனே காரை விட்டு இறங்கி வந்து விசாரித்தார். தான் வசித்து வரும் வீட்டை உரிமையாளர் காலி பண்ணி சொல்லிவிட்டதாகவும், ஆனால் வீட்டுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையை கொடுக்க மறுப்பதாகவும் கூறி கண்கலங்கினார்.
உடனே மூதாட்டியை காரில் ஏற்றிக்கொண்டு சம்பந்தப்பட்ட வீட்டுக்கு ஆட்சியர் அன்பழகன் சென்றார். இதனை அடுத்து வீட்டு உரிமையாளரை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டனர். மூதாட்டிக்காக மாவட்ட ஆட்சியரே நேரில் வந்திருப்பதை அறிந்து வெலவெலத்துப் போன வீட்டு உரிமையாளர், ஒரு வாரத்துக்குள் அட்வான்ஸ் தொகையை திருப்பி தந்துவிடுவதாக உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து வயதான காலத்தில் தனிமையில் மிகவும் கஷ்டப்படுவதாக மூதாட்டி ஆட்சியர் அன்பழகனிடம் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனை அடுத்து தன்னிடமிருந்த 5000 ரூபாயை மூதாட்டியிடம் கொடுத்து ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.
மூதாட்டி குறித்து மீடியாக்களில் செய்திகள் வெளியானது. இதைப் பார்த்த கொடைக்கானல், பண்ணைக்காடு விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் செயலாளர் சுவாமி கங்காதரனாந்தா இன்று மதுரை வந்து மூதாட்டி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், மூதாட்டி உயிரோடு இருக்கும் வரை அவர் தங்கியிருக்கும் வீட்டு வாடகையை தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார். மேலும் மூதாட்டிக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் பழங்களை வழங்கினார். அதோடு ரூ.10,000 நிதியுதவி அளித்தார். இந்த சம்பவம் மதுரை மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.