'டாய்லெட்க்கு கூட எழும்பி போக முடியாது'... 'தம்பிக்காக சொத்தையும் வித்தாச்சு'... '14 வருசமா படுத்த படுக்கை'... நெஞ்சை நொறுக்கும் அண்ணனின் பாச போராட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கன்னியாகுமரி அருகே பாறசாலை என்னும் இடத்தில் வசிப்பவர் விபின். இவருக்கு லிஜோ என்ற தம்பி உள்ளார். லிஜோவுக்கு 19 வயது இருக்கும் போது, வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு கழுத்துக்கு கீழ் உடல் பகுதி முழுவதுமாக செயலிழந்துவிட்டது.

B.Tech படிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, லிஜோ படுத்த படுக்கையாகிவிட்டார். அன்று முதல் வெண்டிலேட்டர் உதவியுடன் மற்றொருவர் கண்காணிப்பில் மட்டுமே வாழ முடியும் என்ற நிலைக்கு லிஜோ தள்ளப்பட்டார்.
தம்பியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று நினைத்த விபின், பணத்தேவைக்காக தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் விற்றதோடு, லிஜோவின் அருகிலேயே 14 ஆண்டுகளாக இரவு பகலாக பாதுகாத்து வருகிறார். இரவில் கூட தம்பி தன்னை அழைக்க, மைக் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி, வீடுமுழுக்க ஸ்பீக்கர்களை அமைத்து கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார், விபின்.
இதுகுறித்து பேசிய லிஜோ, "கடந்த 14 ஆண்டுகளாக என்னுடைய அண்ணன் தான் என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கையே எனக்காக அர்ப்பணித்துள்ளார். அவருக்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
வேலைக்கு செல்ல முடியாது, செலவு செய்ய சொத்தோ பணமோ கிடையாது, பராமரிக்க தாய் தந்தை இல்லை, இதற்கிடையே லிஜோ-விபினுடன் பிறந்த 2 சகோதரிகளும் குடும்ப சூழ்நிலையால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படி பல போராட்டங்களுக்கு ஆளாகியிருக்கும் விபின், தன்னுடைய 2 குழந்தைகளை படிக்க வைக்க முடியாமலும் தவித்துவருகிறார். விபின்-லிஜோ இடையேயான பாசப் போராட்டம் குறித்து தெரியவந்து, மனித உரிமை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீஜேஷ் என்பவர் உதவ முன்வந்திருக்கிறார்.
இதுகுறித்து பேசும் அவர், மொத்த குடும்பத்தையும் தாங்கி நிற்கும் விபினின் வாழ்க்கையை பார்த்து தான் அதிர்ந்து போய்விட்டதாக கூறியுள்ளார். தம்பிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து நிற்கும் அண்ணன் விபினுக்கு உரிய உதவி கிடைக்கும் பட்சத்தில், 7 உயிர்களுக்கு அது சென்று சேரும்.
பெற்றோரை முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கும் இந்த காலகட்டத்தில், தன்னுடைய தம்பிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த விபின், இன்னும் மனிதநேயம் மரணிக்கவில்லை என்பதற்கு எடுத்துகாட்டு.

மற்ற செய்திகள்
