வெள்ளையாக வந்த குடிநீர்.. ‘யாரும் குடிக்காதீங்க’.. எச்சரிக்கை செய்த நபர்.. சோதனையில் வெளியான ‘பகீர்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிராம மக்கள் குடிக்கும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியதுக்கு உட்பட்டது பொன்னால்லகரம் கிராமம். இந்த கிராமத்துக்கு ஊராட்சி சார்பில் காலையும், மாலையும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று காலை வழக்கம் போல குடிநீருக்காக அப்பகுதி மக்கள் காத்திருந்துள்ளனர்.
அப்போது குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் வழக்கத்துக்கு மாறாக வெள்ளையாக வந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர், உடனே ஊர்மக்களிடம் யாரும் தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என முன்னெச்சரிக்கை செய்துள்ளார்.
இதனை அடுத்து ஊராட்சி நிர்வாகம் சோதனை செய்ததில் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது தெரியவந்தது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது. இதுதொடர்பாக கிராம மக்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்ட குடிநீர் பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.