கொரோனா டெஸ்ட் முடிச்சிட்டு 'பஸ்'ல டிராவல்... செல்போனில் வந்த தகவலால்... ஓட்டம் பிடித்த சக 'பயணிகள்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து அரசு பேருந்து ஒன்று வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து காடாம்புலியூர் வந்த போது நெய்வேலி செல்ல வேண்டி ஒரு தம்பதியர் பேருந்தில் ஏறினர்.

பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், அந்த தம்பதியருக்கு சுகாதாரத்துறையினரிடம் இருந்து அழைப்பு வந்தது. போனில் பேசிய அதிகாரி ஒருவர், நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அவர்களும் பேருந்தில் இருக்கும் தகவலை தெரிவிக்க செல்போனை உடனடியாக நடத்துனரிடம் கொடுக்க வேண்டி கூறியுள்ளனர்.
இதனையடுத்து நடத்துனரிடம் பேசிய அதிகாரிகள், அந்த தம்பதியருக்கு கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனை முடிவு வெளிவந்துள்ளது. அதனால் அவர்களை அங்கேயே இறக்கி விட்டுச் செல்லுங்கள், ஆம்புலன்ஸ் வந்து அவர்களை ஏற்றிச் சென்று விடும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இதனை கூறி அந்த தம்பதியரை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட அடுத்த நொடி, பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் பீதியில் பேருந்தை விட்டு ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பேருந்து ஓட்டுநர், இதுகுறித்து வடலூர் பணிமனைக்கு தகவல் தெரிவித்தார். அங்குள்ளவர்கள் உஷார் நிலையில் இருக்க பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வாசலில் வைத்தே அந்த தம்பதியர் அமர்ந்த இருக்கை, மற்ற இருக்கை உட்பட பேருந்து முழுவதும் கிருமிநாசினி கொண்டு நன்றாக கழுவப்பட்டு பின் பணிமனைக்குள் கொண்டு செல்லப்பட்டது.
பொதுவாக, கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் அதன் முடிவு வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியும் சிலர் இது போன்று எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் வெளியே சுற்றி மற்றவர்களுக்கும் பரவும் அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பீதியை உருவாகியுள்ளது.

மற்ற செய்திகள்
