‘இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ..!’ சென்னை டீக்கடைக்காரருக்கு ‘ஷாக்’ கொடுத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் QR Code-ஐ பயன்படுத்தி நூதன முறையில் பணத்தை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கந்தன்சாவடியில் துரை என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். தற்போது பலரும் ஆன்லைன் பரிவர்த்தனையை பயன்படுத்தி வருவதால், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்காக QR Code-ஐ பயன்படுத்தி வந்துள்ளார். ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கின் வரவு செலவு கணக்குகளை துரை சரிபார்த்து வந்துள்ளார்.
அதேபோல் கடந்த மாதத்துக்கான வருமானத்தை ஆய்வு செய்தபோது பணம் வெகுவாக குறைந்திருப்பதைக் கண்டு குழப்பமடைந்துள்ளார். இதனை அடுத்து QR Code-ஐ சோதனை செய்தபோது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த QR Code-ஐ ஸ்கேன் செய்தால் அது வேறொரு வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிற்கு செல்வது தெரியவந்துள்ளது. இத்தனை நாட்களாக வாடிக்கையாளர்கள் செலுத்தி பணம் அனைத்து அந்த வங்கிக் கணக்கிற்கே சென்றுள்ளது.
உடனே இதுதொடர்பாக காவல் நிலையத்தில் துரை புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருவர் டீக்கடை அருகே இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இருவரும் கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் வல்லரசு என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் துரையின் டீக்கடையில் உள்ள QR Code மீது அடையாளம் தெரியாதபடி வேறொரு QR Code-ஐ ஒட்டியுள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் அனைத்தும் இவர்களது வங்கிக் கணக்கிற்கு சென்றுள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார், இவர்கள் வேறு எந்த இடங்களில் எல்லாம் இதே பாணியில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என விசாரித்து வருகின்றனர். இதில் வல்லரசு என்பவர் போன் பே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் காரணமாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை மக்கள் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு பணமாகவோ, ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி வந்த பலரும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் என ஆன்லைன் பணப் பரிவர்த்தனையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் QR Code-ஐ பயன்படுத்தி சென்னையில் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
