"ஒண்ணு வாங்குனா இன்னொன்னு 'ஃப்ரீ'..." 'உணவு' பொருளுக்காக 'பேஸ்புக்'கில் வந்த ஆஃபர்... 'ஆர்டர்' செய்த பெண்ணிற்கு காத்திருந்த 'அதிர்ச்சி'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரு பகுதியை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர், இணையத்தில் நடந்த மோசடி மூலம் சுமார் 50,000 ரூபாய் வரை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு பெங்களூருவின் எலாசெனஹள்ளி (Yelachenahalli) என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சவிதா சர்மா. இவர், பேஸ்புக் பக்கத்தில், உணவகம் ஒன்று தாலி உணவு வகைக்கு 'ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்' என சலுகை விளம்பரம் இருப்பதை பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உணவை ஆர்டர் செய்ய வேண்டி அந்த விளம்பரத்தில் இருந்த தொலைபேசி எண்ணை சவிதா சர்மா தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது மறுமுனையில் பேசிய நபர், முதலில் 10 ரூபாயை ஆன்லைன் மூலமாக செலுத்தினால் தான் இந்த தள்ளுபடியை உங்களால் பெற முடியும் என கூறியுள்ளார். மீதி பணத்தை சாப்பாடு பொருள் வீட்டிற்கு டெலிவரி செய்ய ஆள் வரும் போது கொடுத்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, சவிதா எண்ணிற்கு படிவம் ஒன்றை நிரப்புவதற்கான லிங்க் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், தனது டெபிட் கார்ட் விவரங்கள் மற்றும் ஏடிஎம் பின் ஆகியவற்றை சவிதா நிரப்பியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் தனது வங்கி கணக்கில் இருந்து சுமார் 50,000 பெறப்பட்டதற்காக மெசேஜ் ஒன்று சவீதாவின் மொபைலிற்கு வந்துள்ளது.
இதனைக் கண்டதும் அதிர்ந்து போன சவிதா, உடனடியாக அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் மேலும் பதற்றமான சவிதா, சைபர் க்ரைம் போலீசாரிடம் புகாரளித்துள்ளார். விளம்பரத்தில் இருந்த உணவகத்தின் பெயரைக் கொண்டு போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இணையதளங்கள் மூலம் நாள்தோறும் பல மோசடிகள் நடந்து வருவதால் மக்களிடையே அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியும் இது போன்ற இணைய மோசடிகளுக்கு அதிகம் பேர் தொடர்ந்து இரையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
