பாவம்னு இரக்கப்பட்டு செஞ்ச காரியம்.. ‘கடைசியில் இப்படி ட்விஸ்ட் அடிச்சுருச்சு!’.. வாகன ஓட்டிகளுக்கு ‘வனத்துறை’ விடுத்த கடும் எச்சரிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் வசிக்கும் குரங்குகளுக்கு உணவு அளித்து அவற்றை சோம்பேறிகளாக்கும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. லங்கூர் குரங்குகள் மற்றும் சாதா வகை குரங்குகள் இந்த மலைப்பாதையில் ஏராளமாக வசிக்கின்றன. இந்த திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குரங்குகளுக்கு பழங்கள் உள்ளிட்ட தின்பண்டங்களை கொடுத்து பழக்கிவிட்டனதால், இப்போதெல்லாம் குரங்குகள் வனப்பகுதிக்குள் சென்று உணவு தேடுவதில்லை. இது அவற்றின் வாழ்வியலை கெடுத்து, அவற்றை சோம்பேறிகளாக மாற்றிவிட்ட செயலாக போய்விட்டது.
அவை எப்போது பார்த்தாலும் சாலையோரத்தில் யாராவது உணவு தருவார்கள் என்று ஆசையுடன் காத்துக்கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்துடன் வாகனங்கள் வரும்போது உணவு கிடைக்கும் என்று கருதி சாலையின் குறுக்கே அடிக்கடி ஓடும் குரங்குகள், அந்த வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
குரங்குகளுக்கு உணவு அளிக்க கூடாது என்று ஆங்காங்கு எச்சரிக்கை பலகை வைத்தும் பயனில்லாததால், குரங்குகளுக்கு உணவு கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்தியமங்கலம் வனக் காப்பக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.