'இரு நடிகர்களின் ரசிகர்கள் குடிபோதையில் மோதல்...' யாரு நிறைய காசு கொடுத்தது...? 'கொரோனா நிவாரண நிதி தொடர்பாக...' கடைசியில் நடந்த விபரீதம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா நிதி யார் அதிகம் கொடுத்தார்கள் என ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவர் இறந்த சம்பவம் விழுப்புரம் மாவட்ட மக்களை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
நண்பர்களான யுவராஜ்(22) மற்றும் தினேஷ் பாபு(22) ஆகிய இருவரும் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் சந்திகாப்பான் கோயில் தெருவில் எதிர் எதிர் வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். யுவராஜ் தீவிர விஜய்யின் ரசிகர் எனவும், தினேஷ்பாபு ரஜினி ரசிகர் எனவும் கூறப்படுகிறது.
நேற்று (ஏப்.23) நண்பர்களான இருவரும் ஊரடங்கு நேரத்தில் மது அருந்திவிட்டு வீட்டில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களின் பேச்சு கொரோனா வைரஸின் பக்கம் சென்றுள்ளது. மேலும் திரையுலகை கலக்கி வரும் இரு ஜாம்பவான்களின் ரசிகர்கள் என்பதால், இருவரில் யார் கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு அதிகம் பணம் கொடுத்தது, ரஜினியா? விஜய்யா என்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நேரம் ஆக ஆக வாக்குவாதம் கைகலப்பில் முற்றி, ஆத்திரம் அடைந்த தினேஷ்பாபு, யுவராஜை கையால் பலமாகத் தாக்கிக் கீழே தள்ளிவிட்டுள்ளார். எதிர்பாராத விதமாக கீழே விழுந்த யுவராஜிக்கு தலையில் அடிபட்டு படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீஸார், இறந்த யுவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ்பாபுவை கைது செய்து மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவர்கள் இருவரும் மது போதையில் இருந்ததால் தான் இந்த தேவையில்லாத வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு உயிரை இழக்கும் அளவிற்கு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த ஊரடங்கு சமயத்தில் அவர்களுக்கு மதுபானம் கிடைத்தது எப்படி என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.