தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்கள் மற்றும் அதற்கு 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ள மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூட தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல்
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 28-ம் தேதி தொடங்கி ஏற்கனவே நிறைவு பெற்றது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74 ஆயிரத்து 416 வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் மூடல்
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. அதன் ஒருபகுதியாக வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள டாஸ்மாக் மற்றும் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு மதுபானம் எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை மீறுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
6 வருஷமா கழுத்தில் சிக்கிய டயருடன் போராடிய முதலை.. மீட்பவருக்கு சன்மானம் அறிவிப்பு..