கொடுத்த டாக்குமெண்ட் எதுவுமே உண்மை இல்ல.. ‘ஐபோன்’ வாங்க பெண் செஞ்ச காரியம்.. வசமாக சிக்கிய பின் அடுத்தடுத்து வெளிவந்த ஷாக்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஐபோன் வாங்க பெண் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை
சென்னையில் உள்ள தனியார் வங்கியின் கிளை மேலாளர் வெங்கட்ராமன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், ராதிகா என்ற பெண் நாகப்ரீத்தி என்பவரின் பெயரில் போலியான ஆவணங்களை கொடுத்து வங்கியில் ரூ.1,08,160 லோன் பெற்று ஐபோன் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
வங்கி மோசடி
இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதும் ஈரோட்டை சேர்ந்த ராதிகா என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ராதிகா தனது உறவினரான நாகப்ரீத்தி என்பவரது பான் கார்டை பயன்படுத்தி போலியான வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் கார்த்திகேயன் என்ற பெயரில் வங்கி கணக்கு தயார் செய்து வங்கியில் சமர்ப்பித்துள்ளார். பின்னர் ரூ.1,08,160 மதிப்புள்ள ஆப்பிள் செல்போனை வாங்கி வங்கிக்கு பணம் செலுத்தாமல் ஏமாற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆள்மாறாட்டம்
மேலும் ராதிகாவும் அவரது கணவர் கார்த்திக்கும் 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் லோன் பெற்றுத்தருவதாக கூறி பொதுமக்களிடம் ஏமாற்றி பணம் பெற்றிருப்பதும், கார் லோன் வாங்கி மோசடி செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. சென்னை, திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் உள்ள ஷோரூம்களில் பல பெயர்களில் ஆள்மாறாட்டம் செய்து வாகனங்களை வாங்கி மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
அடுத்தடுத்து அதிர்ச்சி
மேலும் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றில் பொருட்கள் வாங்கிவிட்டு, பின்னர் அதில் உள்ள பொருட்களை மாற்றி திருப்பி அனுப்பி ஏமாற்றியது தொடர்பாக கோவை, ஈரோடு, சென்னை, மதுரை போன்ற பல இடங்களில் இவர்கள் மீது வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ராதிகாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஐபோன் வாங்குவதற்காக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பெண் ஒருவர் மோசடி செய்த வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
