'பிரேக் டவுன் ஆன கரும்பு லாரி...' நடுக்காட்டில் யானைகள் வைத்த 'ஜூஸ்' விருந்து...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கரும்பு ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்ற நிலையில், அங்கு வந்த யானைகளுக்கு விருந்தாக மாறிய சம்பவம் திம்பம் மலைப்பாதையில் நடந்துள்ளது.
நேற்று (23.09.2020) இரவு அதிகாலை சுமார் 3 மணியளவில் மைசூரிலிருந்து திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கரும்பு லாரி ஒன்று பழுதாகியுள்ளது. இந்நிலையில் லாரியின் ஓட்டுநர் பழுதுபார்க்க மெக்கானிக்கை அழைத்தி வர சென்ற நிலையில் அங்கு ஒரு விருந்தே நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. மேலும் வழக்கமாக கரும்புகள் ஏற்றிய லாரிகள் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக பயணிப்பது வழக்கம்.
அதேபோல் ஒரு சில நேரங்களில் வனப்பகுதியில் உலாவும் யானைகள் அடிக்கடி சாலைப்பக்கமும் வந்து செல்லுமாம். அதேபோல் தான் நேற்றும் அவ்வழியே வந்த காட்டு யானைகள் திம்பம் மலைப்பாதையில் நின்றிருந்த கரும்பு லாரியை நோக்கி படையெடுத்தன.
மேலும் லாரியில் இருந்து கரும்புத்துண்டுகளை யானைகள் தும்பிக்கையால் பறித்து தின்று ருசித்தன. தங்கள் பசி அடங்கும் வரை யானைகள் லாரியைச் சுற்றி சுற்றி வந்ததோடு, கரும்புத்துண்டுகளையும் சாப்பிட்டுள்ளன. இதைக்கண்டு வியந்த வாகன ஓட்டிகள் பயத்தில் உறைந்துள்ளனர்.