“3 தலைமுறையா பட்டாசு வெடிக்கல!”... ‘இப்படி’ ஒரு நெகிழ்ச்சி காரணமா? ஆச்சரியமூட்டும் ‘விதிமுறைகள்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீர்காழி அருகே மூன்று தலைமுறைகளாக தீபாவளி அன்று வெடி வெடிக்காமல் இருந்து வரும் பெரம்பூர் கிராம மக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக வவ்வால்ளை பாதுகாக்கும் விதமாகவும் நிரந்தரமாக குடியேறிய வெளிநாட்டு பறவைகளை பாதுகாக்கும் விதமாகவும் விவசாய பூமியான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பெரம்பூர் என்கிற இந்த கிராமத்தில் இந்த விதிமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள ஆலமரத்தில் சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான பறவை இனங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தின் வயல் நடுவில் இருக்கும் இந்த ஆலமரத்தில் வவ்வால்கள் இருப்பதால் இதை வவ்வாளடி என்றும் அழைக்கின்றனர். வவ்வால்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் அனுமதியின்றி வெளிநபர்கள் யாரும் செல்ல முடியாது. வவ்வால்களை பாதுகாக்க இளைஞர்கள் கொண்ட வேட்டை தடுப்பு குழு ஒன்றையும் இந்த கிராம மக்கள் மூன்று தலைமுறைகளாக அமைத்துள்ளனர்.
அவற்றை பாதுகாக்கும் பொருட்டு தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிப்பதை தடை செய்துள்ளனர். பட்டாசுகளின் சத்தத்தால் வவ்வால்கள் அச்சமடையும் என்பதால் இந்த கட்டுப்பாடு ஆண்டாண்டு காலமாக உள்ளதுடன், இந்த கிராம மக்கள் தங்களுடைய காக்கும் தெய்வமாகவும் வவ்வால்களை வழிபட்டு வருகின்றனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிக்க ஆசைப்பட்டால் கூட அருகில் உள்ள மற்ற கிராமங்களுக்கு சென்று வயல் பகுதியில் தான் வெடிக்க வேண்டும் என்கிற விதிமுறை இங்கு இன்னும் நிலவி வருகிறது.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு பறவைகளும் இங்கு வரத் துவங்கியுள்ளன. அத்துடன் ஆஸ்திரேலிய நாட்டு பறவை இனங்களான வக்கா, பூநாரை ,நீர்காகம் ,வெள்ளை காகம் உள்ளிட்ட பறவைகள் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் மார்ச் வரையிலும் இங்கு வந்து தங்கி இனப்பெருக்கத்திற்கு பின் தன் குஞ்சுகளுடன் தாயகம் திரும்புவது வழக்கம்.
எனினும் பெரம்பூர் கிராமத்தின் பசுமை சூழலால் கவரப்பட்ட சில பறவைகள் தற்போது அங்கு நிரந்தரமாகவே கூடுகள் அமைத்து தங்க தொடங்கிவிட்டன. பறவைகளை காக்கும் இந்த பகுதியில் ஒரு சரணாலயம் அமைக்க வேண்டும் என்றும் பெரம்பூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
