‘சென்னைங்கறது ஊர் பேரு’.. ஆனா ‘மெட்ராஸ் ஒரு உணர்ச்சி’.. வைரலாகும் ‘பிரபல சிஎஸ்கே வீரரின் ட்வீட்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Aug 22, 2019 04:11 PM
சென்னை மாநகரின் அழகையும், பெருமையையும் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ஆம் தேதி மெட்ராஸ் டே ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.

லண்டனுக்கு அடுத்ததாக உலகின் பழமையான மாநகராட்சியாக விளங்கும் சென்னை பழமையின் சுவடுகளோடு காலத்துக்கேற்ப புதுமைகளையும் தாங்கி இன்றும் கம்பீரத்துடன் நிற்கும் பெருமை உடையது. 1639ஆம் ஆண்டு வெங்கட நாயக்கர் என்பவரிடமிருந்து மதராஸ பட்டினத்தின் ஒரு சிறுபகுதியை கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக பிரான்சிஸ் டே மற்றும் ஹென்றி ஹோகன் ஆகிய இருவரும் வாங்கிய நாளே மெட்ராஸ் டே ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகின் பிரபலமான நகரங்களில் ஒன்றாகத் திகழும் சென்னை நிறுவப்பட்டு 379 ஆண்டுகள் ஆனதை சென்னைவாசிகள் ஆகஸ்ட் 18 முதல் 25ஆம் தேதிவரை ஒரு வார விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு மெட்ராஸ் டே கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் மூலமாக சென்னைக்கு மிகவும் நெருக்கமானவராக மாறிய ஹர்பஜன் சிங் மெட்ராஸ் டே குறித்து பதிவிட்டுள்ள டுவீட் தற்போது வைரலாகி வருகிறது. அந்த டுவீட்டில் ஹர்பஜன், “கலீஜ், டௌலட், பிசுக்கோத், நைனா, ஓசி, பிஸ்து, அட்டு, பேஜார், அள்ளு, தல, மாமி, மாமே இப்பிடி எத்தனை வார்த்தைங்க நம்ம சென்னையை அலங்கரிக்க. ஆதார் கார்டு இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம மெட்ராஸ் தாங்க. சென்னை என்பது ஊர் பெயர், மெட்ராஸ் என்பது உணர்ச்சி” எனப் பதிவிட்டுள்ளார்.
கலீஜ்,டௌலட்,பிசுக்கோத்,நைனா, ஓசி,பிஸ்து,அட்டு,பேஜார், அள்ளு,தல,மாமி,மாமே,இப்பிடி எத்தனை வார்த்தைங்க நம்ம சென்னையை அலங்கரிக்க.ஆதார் கார்டு இல்லாதவங்களுக்கும் அட்ரஸ் நம்ம மெட்ராஸ் தாங்க.சென்னை என்பது "ஊர் பெயர்" மெட்ராஸ் என்பது "உணர்ச்சி"
Happy #chennaiday #MadrasDay #Madras380
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 22, 2019
