‘ஸ்டாலினை அவரது தந்தையே நம்பவில்லை’!.. ‘அப்புறம் நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்’.. முதல்வர் பழனிசாமி விமர்சனம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கருணாநிதியின் செல்வாக்கில்தான் ஸ்டாலின் வந்தார் என தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.பி.அன்பழகனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, ‘நான் கிளை செயலாளராக இருந்து ஒன்றியப் பொறுப்பு, மாநில பொறுப்பு, மாவட்ட பொறுப்பு, எம்எல்ஏ, எம்.பியாக மக்களின் ஆதரவோடு இப்போது முதல்வர் ஆகியுள்ளேன்.
மு.க.ஸ்டாலின் அப்படி வந்தாரா? அவருடைய அப்பா முதல்வராக இருந்தார். அவருடைய அப்பா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்தார். அவருடைய செல்வாக்கில் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏ ஆனார். 89-ல் அவரும் எம்எல்ஏ நானும் எம்எல்ஏ. நான் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனேன்.
சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து கிளை செயலாளராகி எம்எல்ஏ-ஆவது எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்கு தெரியும். நான் படிபடிப்பாக உழைத்து முன்னுக்கு வந்தேன். நான் இதனை சொன்னதும் காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரி, ஸ்டாலினுக்கு ஜால்ரா போடுகிறார். அவரும் உழைத்துதான் வந்தார் என்று. ஸ்டாலின் எங்கப்போய் உழைச்சார்.
கருணாநிதியின் செல்வாக்கில் ஸ்டாலின் வந்தார். அவருடைய விலாசத்தை வைத்துதான் நீங்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறீர்கள். ஸ்டாலின் உழைப்பால் உயர்ந்தாரா? அவருடைய அப்பாவின் உழைப்பால் உயர்ந்தார். கருணாநிதி உடல்நலம் குன்றி இருந்தபோது திமுக தலைவர் பொறுப்பை ஸ்டாலினிடம் ஒப்படைக்கவில்லை. செயல் தலைவர் என்ற பொறுப்பைதான் ஒப்படைத்தார். அவருடைய தந்தையே அவரை நம்பவில்லை. நாட்டு மக்கள் எப்படி நம்புவார்கள்.
நான் முதல்வராக பதவியேற்றபின் கொஞ்சம் தொந்தரவா கொடுத்தார்கள். நிம்மதியாகவா இருக்க விட்டார்கள். தினமும் ஒரு போராட்டத்தை அறிவிப்பார். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டார்கள். மக்களின் பேராதரவோடு அத்தனையும் முறியடிக்கப்பட்டது. இந்த ஆட்சியையும், கட்சியையும் மக்கள்தான் காப்பாற்றி கொடுத்தார்கள். உழைக்கும் அதிமுக ஏற்றம் பெறுகிறது. உழைப்பே இல்லாத திமுக சரிந்துக்கொண்டிருக்கிறது. ஏதாவது பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஸ்டாலின் துடிக்கிறார்’ என தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலினை முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்தார்.