"இந்த ஒரு விஷயத்துக்காக... ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்"!.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் பழனிசாமி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுக ஆட்சியில் தமிழகம் சட்ட ஒழுங்கில் முதல் மாநிலமாக திகழ்வதாக கள்ளக்குறிச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக கூட்டணி, வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி என்று குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி என்றார்.
விவசாயிகளை கேலி கிண்டல் செய்யும் மு.க.ஸ்டாலின், தன்னை ஒரு போலி விவசாயி என விமர்சிப்பதாகவும், இத்தகைய ஆராய்ச்சிக்கு அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியில் எண்ணற்ற நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், அதை மறைத்து மு.க.ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரம் செய்வதாகவும், எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். தான் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, அவை முடிந்த பிறகு தானே தொடங்கியும் வைப்பதாகவும் அவர் கூறினார்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே திமுகவினர் அராஜகம் செய்ய ஆரம்பித்துவிட்டனர் என்றும், ஆட்சியில் இருந்தபோது திமுக நல்லது எதுவுமே செய்யாத காரணத்தினால் தான் 10 ஆண்டுகளாக வனவாசம் அனுபவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் தமிழகம் சட்ட ஒழுங்கில் முதல் மாநிலமாக திகழ்வதாகவும், ஜாதி, மதச்சண்டைகள் இல்லாமல் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாய மோட்டார்களுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் என அதிமுக அரசு மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாக திகழ்வதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.