‘மனசு வேதனையா இருக்கு’!.. ‘எங்கபோனாலும் இதையே கேட்குறாங்க’.. தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்த நடிகர் மன்சூர் அலிகான்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகர் மன்சூர் அலிகான் திடீரென சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் பல ஆண்டுகளாக இருந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் சார்பாக இவர் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இதனை அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மன்சூர் அலிக்கானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான், ‘தமிழ் தேச புலிகள்’ என்ற புதிய கட்சியை சமீபத்தில் தொடங்கினார். முதலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த மன்சூர் அலிகான், திடீரென தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அங்கு அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணியும், திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார்கள்.
கடந்த சில நாட்களாகவே தொண்டாமுத்தூர் தொகுதியில் பிரசாரம் செய்துவந்த மன்சூர் அலிகான், பார்க்கில் வாக்கிங் செல்வது, நாயுடன் கலந்துரையாடுவது, மீன் விற்பனை என தொகுதி மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடாமல் விலகுவதாக ஆடியோ ஒன்றை மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ளார்.
அதில், தொகுதியில் எங்குச் சென்றாலும் எவ்வளவு பணம் பெற்றுக் கொண்டு போட்டியிடுகிறீர்கள் என கேட்கிறார்கள், அது தனக்கு வேதனை அளிப்பதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரிக்க தேர்தலில் போட்டியிடுவதாக நினைப்பது தனக்குக் கஷ்டமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மன்சூர் அலிகானின் இந்த திடீர் முடிவு அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.