'சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்டா பாக்ஸிங் பண்றது யாரு?'... தேர்தல் பரப்புரையில் அதிரவைத்த முதல்வர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தது அ.தி.மு.க அரசு என முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து புவனகிரி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அரியலூர், பெரம்பலூர் பகுதிக்குச் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்று காலை கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பேசிய முதல்வர், ''தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் நமது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பற்றியும், என்னைப் பற்றியும் பொதுமக்களிடம் அவதூறு பரப்பி வருகிறார். அ.தி.மு.க. கட்சி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னைப் பார்த்து நான் விவசாயி இல்லை, போலி விவசாயி என்று பிரசாரம் செய்கிறார். எனது தாத்தா காலத்திலிருந்தே நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். எனக்குச் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. நானும் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகளில் எப்படி போலி விவசாயி இருக்கமுடியும்.
தி.மு.க.வினர் காவல்துறையை மிரட்டுகின்றனர். ஸ்டாலினின் மகனான உயதநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். வந்தால் உங்களை என்ன செய்வோம் என்று தெரியுமா? என காவல்துறையை எச்சரிக்கிறார். காவல்துறை அதிகாரிகளுக்கே இந்த நிலைமை என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் நிலை என்னவாகும்
தி.மு.க.வில் உள்ளவர்கள் குண்டர்களாகவே இருப்பார்கள். அவர்கள் ஓட்டல்களில் சென்று பிரியாணி, பரோட்டா ஆகியவை சாப்பிட்டுவிட்டு கடைக்காரர் பணம் கேட்டால் காசு கொடுக்காமல் அவர்களைத் தாக்குவார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சட்டம்- ஒழுங்கு நிலையாக உள்ளது. இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கில் தமிழகம்தான் முதல் இடத்தில் உள்ளது.
மேலும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 6 கியாஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். கட்டணம் இல்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும். நிலம் மற்றும் வீடு இல்லாத விவசாயத் தொழிலாளிகளுக்கு அரசே நிலம் வாங்கி வீடுகட்டி கொடுக்கும். இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது.
எனவே வருகின்ற சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்குப் பொதுமக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' எனத் தனது பரப்புரையில் முதல்வர் தெரிவித்தார்.