VIDEO: ‘ஊர்ந்து போய் முதல்வராக நான் என்ன பாம்பா? பல்லியா?’!.. ‘பேசுறதுக்கு ஒரு தகுதி வேண்டா..!’.. பரப்புரையில் முதல்வர் ஆவேசம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊர்ந்து போய் முதல்வர் பதவி வாங்க தான் என்ன பாம்பா? பல்லியா? என பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘திமுக ஆட்சியில் இழந்த காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்தது அதிமுக அரசுதான். நான் விவசாயி என்று கூறினால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது. எடப்பாடி விவசாயி.., விவசாயி.., என குதிக்கிறார் என ஸ்டாலின் சொல்லுகிறார். நான் குதித்தால் உங்களுக்கு என்ன? நான் இப்போதும் ஒரு விவசாயிதான். இப்போதும் நான் விவசாயம்தான் செய்து வருகிறேன்.
விவசாயிகள் கஷ்டத்தை உணர்ந்தவன் நான். வெயில், மழை, இரவு, பகல் என எதையும் பார்க்காமல் ரத்தம், வியர்வை சிந்தி உழைக்கும் ஒரே தொழில் விவசாயம். இதைப்பற்றி ஸ்டாலினுக்கு சிந்திக்க தெரியாது. சிந்தித்தாலும் பேசத் தெரியாது. என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம்தான் செய்துகொண்டிருக்கிறோம்’ என முதல்வர் பழனிசாமி பேசினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, ‘நான் ஊர்ந்து போய் முதல்வர் பதவி பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் விமர்சிக்கிறார். ஒரு முதல்வரை எப்படி பேசவேண்டும் என்பது கூடத் தெரியாதவர்தான் ஸ்டாலின். நான் ஊர்ந்து போய் முதல்வராக பல்லியா? பாம்பா? நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன். பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டாம்.
அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்படுவதால் தொழில் வளம் பெருகுகிறது. விவசாய மோட்டார்களுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கி, இந்திய திருநாட்டிற்கே தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்கிரது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியது அதிமுக அரசுதான். மாதந்தோறும் 6 சிலிண்டர்கள் இலவசம், ரேசன் அட்டைகளுக்கு 1500 ரூபாய் நிதியுதவி, இலவச வாஷிங்மெஷின் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம்’ என முதல்வர் பழனிசாமி கூறினார்.

மற்ற செய்திகள்
