‘பசி’ கொரோனாவை விட கொடியது.. ‘இத என் கவனத்துக்கு கொண்டு வந்ததுக்கு நன்றி’.. முதல்வர் எடுத்த அதிரடி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 25, 2020 11:00 AM

ஊரடங்கால் உணவு கிடைக்காமல் தவித்த பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ட்விட்டர் வழியாக முதல்வர் உதவி செய்தார்.

CM Edappadi Palaniswami help cracker workers family through Twitter

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கால் ஆதரவற்றவற்றவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு உணவு சரிவர கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் விருதுநகரில் பட்டாசு தொழிலாளர்கள் போதிய உணவின்றி தவித்து வருவதாகவும், அவர்களில் சிலர் ஒருவேளை மட்டுமே உணவு உண்டு வருவதகாவும் புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவை புதிய தலைமுறை செய்தியாளர் ரமேஷ் என்பவர் முதல்வர் பழனிசாமிக்கு டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர், அவர்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பகிரவும். இதை எனது கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி என தெரிவித்திருந்தார். ட்விட்டரில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாக ட்விட்டரிலேயே பதிலளித்து, அதுகுறித்து நடவடிக்கை எடுத்து வரும் முதல்வரின் செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.